தேடுதல்

கிறகோரியன் பாப்பிறை பல்கலைக்கழக அரங்கம் கிறகோரியன் பாப்பிறை பல்கலைக்கழக அரங்கம் 

மக்களின் நம்பிக்கையே திருஅவையின் கருவூலம்

திருஅவையின் ஆலயங்கள், கட்டடங்கள், கலாச்சாரக் கருவூலங்கள், அனைத்துமே, நம்பிக்கை கொண்ட இறைமக்களின் பாரம்பரியச் சொத்து - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இறைநம்பிக்கை கொண்டோரின் சாட்சிய வெளிப்பாடாக விளங்குவதே திருஅவையின் கலாச்சாரக் கருவூலங்கள் என்றும், ஒருவகையில் இவை, நற்செய்தியைப் பரப்பும் கருவிகள் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கிற்கு அனுப்பிய செய்தியில் கூறியுள்ளார்.

"இறைவன் இங்கே உறைவதில்லையா? வழிபாட்டு, மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பேணிக்காப்பது" என்ற தலைப்பில், நவம்பர் 29, 30 ஆகிய இரு நாள்கள், உரோம் நகரின் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக் கழகத்தில் நடைபெறும் பன்னாட்டுக் கருத்தரங்கிற்கு திருத்தந்தை அனுப்பியச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.

இயேசு சபையினரால் நடத்தப்படும் கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக் கழகமும், திருப்பீடக் கலாச்சார அவையும், இணைந்து நடத்தும் இக்கருத்தரங்கின் ஆரம்ப அமர்வில், திருப்பீடக் கலாச்சார அவையின் தலைவர் கர்தினால் ஜியான்பிராங்கோ இரவாசி அவர்கள், திருத்தந்தை அனுப்பியிருந்த செய்தியை வாசித்தார்.

வழிபாட்டு பாரம்பரியத்தையும், கலாச்சாரப் பாரம்பரியத்தையும் காப்பதன் முக்கியத்துவத்தை கத்தோலிக்கத் திருஅவை எப்போதும் உணர்ந்து வந்துள்ளது என்பதை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனிதத் திருத்தந்தையரான 6ம் பவுல் மற்றும் 2ம் ஜான்பால் ஆகியோர், இதைக் குறித்து கூறிய கருத்துக்களை சுட்டிக்காட்டினார்.

திருஅவையின் கருவூலங்கள் என்று கூறும்போது, புனித தியாக்கோன் லாரன்ஸ் அவர்கள் வறியோரைச் சுட்டிக்காட்டிய வரலாற்று நிகழ்வையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும் என்று கூறியத் திருத்தந்தை, வறியோரைப் பாதுகாப்பது, திருஅவையின் கருவூலங்களைக் காப்பதாகும் என்று வலியுறுத்தினார்.

திருஅவையின் ஆலயங்கள், கட்டடங்கள், கலாச்சாரக் கருவூலங்கள், அனைத்துமே, நம்பிக்கை கொண்ட இறைமக்களின் பாரம்பரியச் சொத்து என்பதை, இக்கருத்தரங்கின் பங்கேற்பாளர்கள் மனதில் கொண்டு தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற ஆவலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் செய்தியில் வெளியிட்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 November 2018, 15:18