தேடுதல்

முன்னாள், இந்நாள் திருத்தந்தையர்கள் முன்னாள், இந்நாள் திருத்தந்தையர்கள் 

இராட்ஸிங்கர் அறக்கட்டளை கருத்தரங்கு-திருத்தந்தையர் வாழ்த்துக்கள்

மனித சமுதாயம், சுவர்களைத் தகர்த்து, முழுமையான மனித முன்னேற்றத்தில் ஆர்வமாக ஈடுபடவேண்டும் என்பதை இக்கருத்தரங்கு வலியுறுத்தும் என்று நம்புகிறேன் - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மனித உரிமைகள் குறித்து ஐ.நா.அவை வெளியிட்ட அறிக்கையின் 70ம் ஆண்டு சிறப்பிக்கப்படும் இவ்வேளையில், இதனை ஒரு வரலாற்று நிகழ்வாக மட்டும் கொண்டாடாமல், மனித உரிமைகள் குறித்த ஒரு விழிப்புணர்வை உருவாக்கும் தருணமாகவும் இதைக் கருத வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒரு பன்னாட்டு கருத்தரங்கிற்கு வழங்கிய செய்தியில் கூறியுள்ளார்.

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் பெயரால் உருவாக்கப்பட்டுள்ள இராட்ஸிங்கர் (Ratzinger) அறக்கட்டளையும், விண்ணேற்பு அடைந்த அன்னை மரியாவின் பல்கலைக் கழகமான LUMSAவும் இணைந்து, நவம்பர் 15, மற்றும் 16ம் தேதிகளில், உரோம் நகரில் நடத்தும் ஒரு பன்னாட்டு கருத்தரங்கிற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள செய்தியில், இவ்வாறு கூறியுள்ளார்.

இராட்ஸிங்கர் அறக்கட்டளையின் தலைவரான இயேசு சபை அருள்பணியாளர் ஃபெதெரிக்கோ லொம்பார்தி அவர்களுக்கு திருத்தந்தை அனுப்பியுள்ள இச்செய்தியில், மனித சமுதாயம், சுவர்களைத் தகர்த்து, முழுமையான மனித முன்னேற்றத்தில் ஆர்வமாக ஈடுபடவேண்டும் என்பதை இக்கருத்தரங்கு வலியுறுத்தும் என்று தான் நம்புவதாகக் கூறியுள்ளார்.

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், தன் உரைகளிலும், மடல்களிலும் முழு மனித முன்னேற்றத்தைக் குறித்து அடிக்கடி குறிப்பிட்டுள்ளதை தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நடைபெறும் கருத்தரங்கிற்கு தன் ஆசீரை வழங்கியுள்ளார்.

"அடிப்படை உரிமைகளும், உரிமைகளுக்கிடையே மோதல்களும்" என்ற மையக்கருத்துடன் நடைபெறும் இக்கருத்தரங்கிற்கு, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும், செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

உலகில் நிலவும் பல்வேறு உரிமைகள் குறித்து மாறுபட்ட கருத்துக்கள் நிலவிவரும் வேளையில், இத்தகைய ஒரு கருத்தரங்கு மிகுந்த பொருளுள்ளதாக விளங்குகிறது என்று, முன்னாள் திருத்தந்தை அவர்களின் செய்தி குறிப்பிடுகிறது.

இரு திருத்தந்தையரின் வாழ்த்துச் செய்திகளும், இக்கருத்தரங்கின் ஆரம்ப அமர்வில், இவ்வியாழன் காலை வாசிக்கப்பட்டன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 November 2018, 14:41