தேடுதல்

வறியோர் உலக நாளன்று  மறையுரையாற்றுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ் வறியோர் உலக நாளன்று மறையுரையாற்றுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ் 

வறியோர் உலக நாளன்று திருத்தந்தை வழங்கிய மறையுரை

அக்கறையற்று, கைகளைக் கட்டிக்கொண்டு நிற்பதோ, ஒன்றும் செய்ய இயலாது என்று, கைகளை விரித்தபடி, தன் இயலாமையை வெளிப்படுத்துவதோ ஒரு கிறிஸ்தவரின் செயல் அல்ல - திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

அக்கறையற்ற மனநிலையோடு, கைகளைக் கட்டிக்கொண்டு நிற்பதோ, ஒன்றும் செய்ய இயலாது என்ற மனநிலையோடு, கைகளை விரித்தபடி, தன் இயலாமையை வெளிப்படுத்துவதோ ஒரு கிறிஸ்தவரின் செயல் அல்ல என்று இஞ்ஞாயிறன்று நிறைவேற்றிய திருப்பலியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மறையுரை வழங்கினார்.

நவம்பர் 18, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட இரண்டாவது உலக வறியோர் நாளையொட்டி, வறியோர் மற்றும் அவர்களுடன் பணியாற்றுவோர் என, 6000த்திற்கும் அதிகமானோர், வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் கூடியிருக்க, அவர்களுக்கு திருப்பலி நிறைவேற்றி, மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு கிறிஸ்துவைப்போல், அயலவரை அணைக்க, நாம் கரங்களை விரித்து, காத்திருக்கவேண்டும் என்று கூறினார்.

தேவையில் இருப்போருடன் நாம் கொள்ளும் தொடர்பின் வழியே நம் விசுவாசத்தை வாழவேண்டும் என்ற எதிர்பார்ப்பு, ஒரு சமுதாயக் கடமை அல்ல, மாறாக, அது, இறையியல் சார்ந்த தேவையாகும் என்று, தன் மறையுரையில் கூறியத் திருத்தந்தை, நாமும், நம் மீட்புக்காக, நம் சகோதரர், சகோதரிகளுடன் இணைந்து, கையேந்திக் கொண்டிருக்கிறோம் என்று விளக்கினார்.

பிறக்கவிருக்கும் குழந்தைகள், சிறார், இளையோர், முதியோர், கைவிடப்பட்டோர், நண்பர்களற்றோர், இயற்கை வளங்களை இழந்தோர் என, அனைத்து இலாசர்களின் அழுகுரல்களும் அநீதியால் பிறந்தவையே என்று, தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

அநீதியே, இவ்வுலகின் வறுமைக்கு அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளது என்பதை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வறியோரின் குரல்கள் எவ்வளவு ஓங்கி ஒலித்தாலும், செல்வந்தர்களின் கூச்சல்களால் அவை அடக்கப்படுகிறது என்பதை, ஒரு கண்டனமாக வெளியிட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 November 2018, 13:00