பாப்பிறை அறிவியல் கழகத்தின் அங்கத்தினர்களுடன் திருத்தந்தை பாப்பிறை அறிவியல் கழகத்தின் அங்கத்தினர்களுடன் திருத்தந்தை 

கட்டுப்பாடுகளற்று வளரும் அறிவியல் ஆய்வுகள், ஆபத்தானவை

சமுதாயத்தின் மீது பாதிப்பை உருவாக்கும் அறிவியல் மீது, நல்மனமுடையோரின் மதிப்பீடுகள் பாதிப்பை உருவாக்குகின்றன‌

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

அறிவியலும், தொழில் நுட்பமும்  சமுதாயத்தின் மீது தங்கள் பாதிப்பை உருவாக்கும் அதே வேளையில், உயரிய மதிப்பீடுகளையும் பண்பாடுகளையும் கொண்டிருக்கும் மனிதர்களும், அறிவியல் மீது தங்கள் தாக்கத்தைக் கொண்டுள்ளனர் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தன் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தை நடத்திவரும், பாப்பிறை அறிவியல் கழகத்தின் அங்கத்தினர்களை திங்களன்று காலையில் திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சுயசார்புடையதாகவும், தன்னிறைவு பெற்றதாகவும், தனக்குரிய இடத்தில் இருந்தவண்ணம், மதத்திற்கும் இறைவனுக்கும் எதிரான நம்பிக்கையின்மைகளை கடந்த காலங்களில் வெளியிட்டு வந்த அறிவியல் உலகம், இன்று, இவ்வுலகம், மற்றும், மனித குலம் குறித்த சிக்கல் நிறைந்த உண்மை நிலைகளை உணர்ந்துள்ளதுபோல் தோன்றுகிறது என உரைத்தார்.

எவ்வித கட்டுப்பாடுகளுமற்று வளரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகள்,  மனித குலத்திற்கு எதிராகக் செல்லும் ஆபத்து குறித்த அச்சமும் சில காலங்களில் எழுந்ததுண்டு என்பதையும், தன் உரையில் குறிப்பிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மனிதர்கள், சமூகம், அறிவியல் ஆகியவற்றிற்கிடையே நிலவும் உறவு புரிந்துகொள்ளப்பட்டு, அடிப்படை மதிப்பீடுகளுக்கு உரிய கவனத்துடன், மனித ஏக்கங்களைப் புரிந்துகொண்டதாக, ஆறிவியல் ஆய்வுகள் இருக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போட்டிகள் நிறைந்த இன்றைய உலகில், அறிவியல் சமுதாயத்தின் ஞானமுள்ள, பொறுப்புணர்வுடன் கூடிய அர்ப்பணத்தின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

மனித குடும்பத்தின் ஒன்றிணைந்த வளர்ச்சிக்கு பணியாற்ற வேண்டிய அழைப்பைப் பெற்றுள்ள அறிவியல் சமுதாயம், மனித குலத்திலிருந்து தனித்து நிற்கும் ஒன்றாக நோக்கப்படாமல், அதன் ஒரு பகுதியாக நோக்கப்பட வேண்டும் என்ற அழைப்பையும் விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 November 2018, 15:15