லித்வேனியாவில் கொல்லப்பட்ட யூதர்களுக்கு அஞ்சலி லித்வேனியாவில் கொல்லப்பட்ட யூதர்களுக்கு அஞ்சலி 

மலைவாழ் யூதர்களின் உலகப் பேரவையினருடன் திருத்தந்தை

கத்தோலிக்கர்களுக்கும், யூதர்களுக்கும் இடையே நலம் மிக்க நட்புறவு வளர்வதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாகக் கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மலைவாழ் யூதர்களின் உலகப் பேரவை என்ற அமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள் 25 பேரை, நவம்பர் 5, இத்திங்கள் காலை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வமைப்பைச் சேர்ந்தவர்கள், முதல் முறையாக, ஒரு திருத்தந்தையைச் சந்திக்க வந்திருப்பதை, தன் வாழ்த்துரையின் துவக்கத்தில் மகிழ்வுடன் குறிப்பிட்டார்.

லித்துவேனியா நாட்டில், வில்நியுஸ் நகரில், யூதர்கள் அடைந்த கொடுமைகளின் நினைவாக எழுப்பப்பட்டுள்ள நினைவிடத்திற்கு, கடந்த செப்டம்பர் 23ம் தேதி, தான் சென்றதை குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை, கடந்த கால நினைவுகளை இழந்துபோனால், நம் எதிர்காலத்தையும் இழந்துவிடுவோம் என்று கூறினார்.

நன்மைகளின் ஊற்றாகிய இறைவனுக்குப் பதிலாக, அதிகாரம், வெறுப்பு என்ற கருத்தியல்களை பீடமேற்றும்போது, அத்தகைய ஆணவச் செயல்கள், வரலாற்றை மாற்றியமைக்கும் சக்தி பெறுகின்றன என்று திருத்தந்தை தன் கவலையை வெளியிட்டார்.

கத்தோலிக்கர்களுக்கும், யூதர்களுக்கும் இடையே நலம் மிக்க நட்புறவு வளரவேண்டுமென்பதில் தான் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாகக் கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைத்து கொடைகளையும் வழங்கும் இறைவனுக்கு, யூதர்களுடன் இணைந்து நன்றி கூற தான் விழைவதாகக் கூறினார்.

மலைவாழ் யூதர்கள், அல்லது, Caucasus யூதர்கள் என்று அழைக்கப்படும் அமைப்பைச் சேர்ந்தவர்கள், பாரசீக நாட்டில், 5ம் நூற்றாண்டு முதல் வாழ்ந்து வந்தவர்கள் என்பதும், தற்போது இவ்வமைப்பைச் சேர்ந்தவர்கள், உலகெங்கும், ஏறத்தாழ, 2,70,000 பேர் வாழ்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 November 2018, 14:36