தேடுதல்

திருத்தந்தையும், முதுபெரும் தந்தை மூன்றாம் மார் ஜெவார்ஜிஸ் அவர்களும் கையெழுத்திட்ட  இணைந்த அறிக்கை திருத்தந்தையும், முதுபெரும் தந்தை மூன்றாம் மார் ஜெவார்ஜிஸ் அவர்களும் கையெழுத்திட்ட இணைந்த அறிக்கை 

கத்தோலிக்கத் திருஅவை, கிழக்கு அசீரிய சபை - இணைந்த அறிக்கை

இறைவனின் திருப்பலியை, ஒரே பலிப்பீடத்தில் இணைந்து கொண்டாடக்கூடிய நாளுக்காக அசீரிய கிறிஸ்தவ சபையும், கத்தோலிக்கத் திருஅவையும் ஆவலுடன் காத்திருக்கின்றன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கீழை வழிபாட்டு முறை, அசீரிய சபையின் முதுபெரும் தந்தைக்கும், ஒரு திருத்தந்தைக்கும் இடையே, முதன்முறையாக, உரோம் நகரில் 1984ம் ஆண்டு இடம்பெற்ற சந்திப்பு, முன்னேற்றம் தரும் நல்ல பலன்களை வழங்கியுள்ளதாக, அண்மையில் வெளியிடப்பட்ட இணை அறிக்கையொன்று கூறுகிறது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கும், கிழக்கு அசீரிய சபையின் முதுபெரும் தந்தை, மூன்றாம் மார் ஜெவார்ஜிஸ் அவர்களுக்கும் இடையே, இவ்வெள்ளியன்று வத்திக்கானில் நிகழ்ந்த சந்திப்பைத் தொடர்ந்து, இரு தரப்பினராலும் ஓர் இணைந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

இறைவனின் திருப்பலியை, ஒரே பலிப்பீடத்தில் இணைந்து கொண்டாடக்கூடிய நாளுக்காக அசீரிய கிறிஸ்தவ சபையும், கத்தோலிக்கத் திருஅவையும் ஆவலுடன் காத்திருக்கின்றன என்று, இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மத்தியக் கிழக்குப் பகுதியில், குறிப்பாக, ஈராக், மற்றும் சிரியாவில், கிறிஸ்தவர்கள் அடைந்துவரும் துன்பங்கள் குறித்து விவரிக்கும் இவ்வறிக்கை, கிறிஸ்தவர்களின் துன்பங்களும், அவர்கள் சிந்திவரும் இரத்தமும் கிறிஸ்தவ ஒன்றிப்புக்கு விதைகளாக செயல்படட்டும் என்று எடுத்துரைக்கிறது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், அசீரிய சபையின் முதுபெரும் தந்தை மூன்றாம் ஜெவார்ஜிஸ் அவர்களும் இணைந்து வெளியிட்டுள்ள இவ்வறிக்கை, கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒருவரோடு ஒருவர் தோள்கொடுத்து நிற்கவேண்டிய அவசியத்தையும், மத்தியக் கிழக்குப் பகுதியில், மதங்களுக்கிடையே நிகழவேண்டிய உரையாடலின் அவசியத்தையும் எடுத்துரைக்கிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 November 2018, 16:22