Tv2000 தொலைக்காட்சியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கும் 'மரியாவே வாழ்க' தொடர் Tv2000 தொலைக்காட்சியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கும் 'மரியாவே வாழ்க' தொடர் 

"அருள் நிறை மரியே வாழ்க" – திருத்தந்தையின் தொலைக்காட்சித் தொடர்

"அருள் நிறை மரியே வாழ்க" செபத்தைக் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள கருத்துக்களை Tv2000 தொலைக்காட்சி, ஒரு புதியத் தொலைக்காட்சித் தொடராக வெளியிட்டுள்ளது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நாம் அனைவரும் பிரதிபலிக்கக் கூடிய ஒரு வாழ்வை, இளம்பெண் மரியா வாழ்ந்தார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

இத்தாலியில் இயங்கிவரும் Tv2000 என்ற தொலைக்காட்சி நிறுவனமும், தகவல் தொடர்பு திருப்பீட அவையும் இணைந்து "Ave Maria", அதாவது, "மரியாவே வாழ்க" என்ற பெயரில் உருவாக்கியுள்ள ஒரு தொலைக்காட்சித் தொடரின் முதல் பகுதியில் திருத்தந்தை இவ்வாறு கூறியுள்ளார்.

அன்னை மரியாவைப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், குழந்தைகளுக்கே உரிய வியப்பு என்ற பண்பை நாம் கொண்டிருக்கவேண்டும் என்று கூறும் திருத்தந்தை, இன்றைய உலகில் மெதுவாகத் தொலைந்துவரும் இந்த வியப்பை, திருஅவை மீண்டும் தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதற்கு முன், Tv2000 தொலைக்காட்சியில், "பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே" என்ற செபத்திற்கு திருத்தந்தை வழங்கிய விளக்கங்கள், ஒரு தொலைக்காட்சித் தொடராக வெளிவந்தன.

அதனைத் தொடர்ந்து, "அருள் நிறை மரியே வாழ்க" செபத்தைக் குறித்து திருத்தந்தை வெளியிட்டுள்ள கருத்துக்களைத் தொகுத்து, இப்புதியத் தொலைக்காட்சித் தொடர் வெளியாகிறது.

பதுவை நகரின் சிறையில் ஆன்மீகப் பணியாளராக உழைத்துவரும் அருள்பணி மார்கோ போத்சா (Marco Pozza) அவர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளும் ஒரு கலந்துரையாடலிலிருந்து, 11 ஒரு நிமிடத் தொகுப்புகளாக உருவாக்கப்பட்டுள்ள இத்தொடரின் முதல் பகுதி, அக்டோபர் 16, இச்செவ்வாய் இரவு, 9 மணிக்கு ஒளிபரப்பப்பட்டது.

ஒவ்வொரு செவ்வாய் இரவும் ஒரு நிமிடத் தொகுப்பாக வெளிவரும் இத்தொடரின் இறுதியில், டிசம்பர் 23ம் தேதி, திருத்தந்தையின் முழுமையான நேர்காணல் ஒளிபரப்பாகும் என்று Tv2000 தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் அருள்பணி போத்சா அவர்கள் மேற்கொண்ட நேர்காணல், "Ave Maria" என்ற தலைப்பில், இத்தாலிய மொழியில், ஒரு நூலாக அக்டோபர் 9ம் தேதி வெளியானது.

இந்நூலின் ஆங்கிலப் பதிப்பு, 2019ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமைப்பணியின் 6ம் ஆண்டு நிறைவு நாளன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 October 2018, 16:43