தேடுதல்

Vatican News
ஆயர் மாமன்றத்தில் திருத்தந்தை ஆயர் மாமன்றத்தில் திருத்தந்தை 

திருஅவையிடம், 'ரெடி-மேட்' பதில்கள் கிடையாது

"அனைத்து கேள்விகளுக்கும், திருஅவையிடம், ஏற்கனவே தயாரிக்கப்பட்ட 'ரெடி-மேட்' பதில்கள் கிடையாது என்பதை ஆயர்கள் மாமன்றம் உணர்த்துகிறது" - திருத்தந்தையின் டிவிட்டர் செய்தி.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இளையோரை மையப்படுத்தி வத்திக்கானில் நடைபெற்றுவரும் 15வது உலக ஆயர்கள் மாமன்றம், இளையோரின் கருத்துக்களுக்கு செவிமடுக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டும் வகையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்புதனன்று தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார்.

"அனைத்து கேள்விகளுக்கும், திருஅவையிடம், ஏற்கனவே தயாரிக்கப்பட்ட 'ரெடி-மேட்' பதில்கள் கிடையாது என்பதையும், திருஅவை, உண்மையிலேயே செவிமடுக்கிறது என்பதையும் உணர்த்தும் அடையாளமாக, இந்த மாமன்றம் அமைந்துள்ளது" என்ற சொற்களுடன், திருத்தந்தையின் டிவிட்டர் செய்தி இப்புதனன்று வெளியாகியுள்ளது.

அக்டோபர் 24, இப்புதன் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 1,731 என்பதும், அவரது செய்திகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 79 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

மேலும், மாமன்றத்தில் பங்கேற்றுவரும் 300க்கும் அதிகமான பிரதிநிதிகள், அக்டோபர் 25, இவ்வியாழனன்று, உரோம் நகரில் உள்ள தோன் ஓரியோனே (Don Orione) மையத்திலிருந்து, வத்திக்கான், புனித பேதுரு பசிலிக்காவில் உள்ள புனித பேதுருவின் கல்லறைக்கு ஒரு திருப்பயணம் மேற்கொள்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வியாழன் காலை 8 மணிக்குத் துவங்கும் இந்த நடைப்பயணம், 11.30 மணியளவில் புனித பேதுரு பசிலிக்காவை அடையும் என்றும், அங்கு நண்பகல் 12 மணிக்கு, ஆயர்கள் மாமன்ற பொதுச் செயலர் கர்தினால் பால்திஸ்ஸேரி அவர்கள் தலைமையில் திருப்பலி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

24 October 2018, 17:03