திருத்தந்தையுடன் ஈரானின் புதிய தூதுவர்  Seyed Taha Hashemi திருத்தந்தையுடன் ஈரானின் புதிய தூதுவர் Seyed Taha Hashemi  

வாழ்வை மாற்றியமைக்கும் இறையன்பில் வாழ்வதே விசுவாசம்

திருத்தந்தை : இதயங்களை திறக்க மறுத்து, இளையோரின் குரல்களுக்கு செவிமடுக்கத் தவறியிருந்தால் மன்னிப்பை வேண்டுகிறேன்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

'தூய ஆவியார் சொல்வதை செவிமடுக்க நாம் அழைப்புப் பெற்றுள்ளோம். தூய ஆவியார் எப்போதும் புதியவற்றையேக் கொண்டுள்ளார்'  என்ற டுவிட்டர் செய்தியை இத்திங்களன்று வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இத்திங்களன்று, திருப்பீடத்தில் பணியாற்ற வந்திருக்கும் ஈரான் நாட்டின் புதிய தூதர் Seyed Taha Hashemi அவர்களையும், நடைபெற்றுவரும் ஐ.நா.வின் 73வது பொது அமர்வின் தலைவராகப் பணியாற்றிவரும் Maria Fernanda Espinosa Garcés அவர்களையும் தனித்தனியே சந்தித்து உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ். 

மேலும், இளையோரை மையப்படுத்தி நடைபெற்ற ஆயர் மாமன்றத்தின் இறுதி நாளான இஞ்ஞாயிறன்று, மூன்று டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

'இளையோர் குரல்களுக்கு நாங்கள் செவி மடுக்கத் தவறியிருந்தால், அதாவது, எங்கள் இதயங்களைத் திறப்பதற்கு பதில், உங்கள் காதுகளை நிறைத்திருந்தால், எங்களை மன்னிக்கும்படி, இளையோரிடம் கேட்டுக்கொள்கிறேன்' என்று, தன் ஞாயிறு மறையுரையில் பகிர்ந்த கருத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் முதல் டுவிட்டர் வழியே வெளியிட்டு, இளையோரிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

தன் இரண்டாவது டுவிட்டரில்,  'விசுவாசம் என்பது வாழ்வாகும். இது, நம் வாழ்வை மாற்றியமைத்துள்ள இறைவனின் அன்பில் வாழ்வதாகும். விசுவாசம் என்பது ஒருவருக்கொருவர் இடையே நிகழும் சந்திப்பை உள்ளடக்கியதே தவிர, வெறும் தத்துவக் கோட்பாடுளை அல்ல' என எழுதியுள்ளார்.

திருத்தந்தை வெளியிட்ட மூன்றாம் டுவிட்டர் செய்தி, 'இந்த ஒன்றிணைந்த பயணத்தில் பங்குபெற்றவர் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நம் வாழ்வின் மகிழ்வாக இருக்கும் இயேசுவுக்கு, இளையோரின் முன்னிலையில் நாம் சாட்சிகளாக விளங்கவும், அவர்களுக்கு அருகாமையில் இருந்து அவர்களுக்கு செவிமடுக்கவும் உதவும் வகையில், நாம் எடுத்து வைக்கும் காலடிகளை இறைவன் ஆசீர்வதிப்பாராக' என உரைக்கிறது.

இதற்கிடையே, இந்தோனேசியாவில், இத்திங்கள் காலை நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து திருத்தந்தையின் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிடும் இரங்கல் தந்தியை, அந்நாட்டிற்கு அனுப்பியுள்ளார், திருப்பீடச் செயலர் கர்தினால் பியேத்ரோ பரோலின்.

விபத்தில் உயிரிழந்தோருக்கும், இவ்விபத்தில் தங்கள் உறவினர்களை இழந்து துயருறுவோருக்கும் திருத்தந்தை தன் செப உறுதிகளை வழங்குவதாக அத்தந்தி செய்தியில்  கூறப்பட்டுள்ளது.

இத்திங்கள் காலை இந்தோனேசியாவின் ஜகார்த்தாலிருந்து 189 பேருடன் புறப்பட்ட விமானம், புறப்பட்ட 13 நிமிடங்களில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 October 2018, 15:00