தேடுதல்

ஆயர் மாமன்ற துவக்க உரையாற்றிய திருத்தந்தை ஆயர் மாமன்ற துவக்க உரையாற்றிய திருத்தந்தை 

உலக ஆயர்கள் மாமன்றத்தில் திருத்தந்தையின் துவக்க உரை

உலக ஆயர்கள் மாமன்றத்தின் ஒவ்வோர் அமர்விலும், ஐந்து பேர் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட பின்னர், ஏறத்தாழ மூன்று நிமிடம் அமைதி காத்து செபிப்போம் என்று திருத்தந்தை கேட்டுக்கொண்டார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இளையோரிடம் உருவாகும் ஆர்வமும், நேர்மறை உணர்வுகளும் இந்த மன்றத்தை மட்டுமல்ல, திருஅவையையும், இவ்வுலகையும் நிரப்புவதை நம்மால் இங்கு உணர முடிகிறது என்று கூறி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலக ஆயர்கள் மாமன்றத்தின் முதல் அமர்வைத் துவக்கிவைத்தார்.

அக்டோபர் 3, இப்புதன் பிற்பகல் 4.30 மணிக்கு, ஆயர்கள் மாமன்ற அரங்கத்தில் கூடியிருந்த கர்தினால்கள், ஆயர்கள், அருள்பணியாளர்கள், அருள் சகோதரிகள், பொதுநிலையினர், இன்னும் குறிப்பாக இளையோரை வரவேற்றுப் பேசிய திருத்தந்தை, இளையோரிடம் காணப்படும் ஆர்வ உணர்வு இந்த மாமன்றத்தின் நாட்கள் அனைத்திலும் தொடரவேண்டும் என்ற விருப்பத்தை வெளியிட்டார்.

ஆயர்கள் மாமன்றத்தின் முக்கியப் பணி, பகிர்வு

உலக ஆயர்கள் மாமன்றம் பகிர்வுக்காக அமைக்கப்பட்ட ஓர் ஏற்பாடு என்பதை, தன் உரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, கூடியிருந்த அனைவரையும், சுதந்திரம், உண்மை, பிறரன்பு ஆகிய பண்புகளுடன் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள அழைப்பு விடுத்தார்.

அதேவண்ணம், மற்றவர்கள் கூறுவதற்கு செவிமடுக்கவேண்டும் என்பதைக் கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குறிப்பாக, அடுத்தவர் சொல்லும் கருத்தில் நமக்கு உடன்பாடு இல்லாத வேளையில், கூடுதலான கவனத்துடன் அவருக்குச் செவிமடுக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை வலியுறுத்தினார்.

தெளிந்து தேர்தலுக்கு, அமைதி தேவை

தெளிந்து தேர்தல் என்ற சொல், இந்த மாமன்றத்தின் மையமாக உள்ளது என்பதை சிறப்பாகக் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தெளிந்து தேர்தல் என்ற வழிமுறையில், அமைதி அவசியம் என்பதால், ஒவ்வோர் அமர்விலும், ஐந்து பேர் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட பின்னர், ஏறத்தாழ மூன்று நிமிடம் அமைதி காத்து செபிப்போம் என்று கேட்டுக்கொண்டார்.

முதியோர், இளையோரின் முற்சார்பு எண்ணங்கள்

வயதில் முதிர்ந்தோர், இளையோரை அனுபவம் அற்றவர்கள் என்றும், இளையோர், வயதில் முதிர்ந்தோரை பழங்காலத்தவர் என்றும் கருதுவதால், இந்தச் சந்திப்பில், இத்தகைய முற்சார்பு எண்ணங்களைக் களைந்துவிட்டு, நம் உரையாடலும், செவிமடுத்தலும் நிகழவேண்டும் என்று திருத்தந்தை தன் உரையில் விண்ணப்பித்தார்.

எந்த ஒரு சமுதாயத்தையும் முன்னெடுத்துச் செல்ல, இளையோரும் தேவை, முதியோரும் தேவை என்பதை சிறப்பாகக் குறிப்பிட்டத் திருத்தந்தை, இவ்விரு தலைமுறைகளும் இணைந்து செல்வதால் உருவாகும் நன்மைகளை சில எடுத்துக்காட்டுகளுடன் குறிப்பிட்டார்.

குருத்துவமயம் என்ற குறுகிய எண்ணத்தின் விளைவுகள்

கத்தோலிக்கத் திருஅவையில், குருத்துவமயம் (Clericalism) என்ற பிரச்சனை, பல நேரங்களில் பெரும் தடையாக அமைந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டிப் பேசியத் திருத்தந்தை, அழைப்பு என்பதை, குருத்துவம், துறவறம் என்ற குறுகிய கண்ணோட்டத்துடன் காண்பதைவிட்டு வெளியேறி, பரந்துபட்ட கண்ணோட்டத்துடன், அழைப்பைக் குறித்து பேச நாம் இங்கு கூடியிருக்கிறோம் என்று கூறினார்.

மாமன்றங்கள், ஏடுகளை உருவாக்குவதற்கு அல்ல...

ஏடுகளை உருவாக்க வேண்டும் என்பதற்காக ஆயர் மாமன்றங்கள் நடைபெறுவதில்லை, ஏனெனில், இந்த ஏடுகளை முழுமையாக வாசிப்பவர்கள் குறைவு, அதே வேளையில், அந்த ஏடுகளில் உள்ள கருத்துக்களைக் குறித்து விமர்சனங்கள் செய்வோர் அதிகம் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திறந்த உள்ளத்துடன் பகிர்வதில் மாமன்றத் தந்தையர் கூடுதல் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

'அழிவின் இறைவாக்கினார்களாக' இராமல்...

திருஅவையில் நிலவும் குறைகளை பெரிதுபடுத்தி, 'அழிவை அறிக்கையிடும் இறைவாக்கினார்களாக' இராமல், எதிர்காலத்தை, நம்பிக்கையோடு நோக்கும் பணியாளர்களாக இருப்போம் என்றும், குறிப்பாக, இந்த மாமன்றத்தில் திருஅவையின் எதிர்காலமான இளையோரைக் குறித்து நம் எண்ணங்களை இன்னும் வலிமையுள்ளதாக மாற்றுவோம் என்றும் திருத்தந்தை தன் உரையின் இறுதியில் அழைப்பு விடுத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 October 2018, 15:20