தேடுதல்

ஆயர் மாமன்ற துவக்கத் திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை ஆயர் மாமன்ற துவக்கத் திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை 

ஆயர் மாமன்ற துவக்கத் திருப்பலி - திருத்தந்தையின் மறையுரை

நாம் அனைவரும் நம்மைச் சார்ந்தவற்றில் அல்ல, பிறரைச் சார்ந்தவற்றிலேயே அக்கறையுள்ளவர்களாகச் செயல்படுவோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

அன்பு நெஞ்சங்களே, இளையோரை மையப்படுத்தி, உலக ஆயர்கள் மாமன்றக் கூட்டம், வத்திக்கானில், அக்டோபர் 3, இப்புதன் முதல் இம்மாதம் 28ம் தேதி முடிய இடம்பெறுகிறது. இந்த மாமன்றக் கூட்டத்தின் துவக்கத் திருப்பலியை இப்புதனன்று காலை, வத்திக்கான், புனித பேதுரு வளாகத்தில் நிறைவேற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ். உலக ஆயர்கள் மாமன்றக் கூட்டத்தில் பங்குபெறும் மாமன்றத் தந்தையர், மற்றும் பிரதிநிதிகளுடன் இணைந்து, வளாகத்தை நிறைத்திருந்த விசுவாசிகளுக்கு, திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவரகள் வழங்கிய மறையுரையின் சுருக்கத்திற்கு இப்போது செவிமடுப்போம்.

“என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத்தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்” (யோவான் 14:26). என்று இயேசு கூறுவதன் வழியாக, தன் சீடர்களிடம் ஒப்படைக்கப்படும் அனைத்து மறைப்பணிகளிலும் துணையாளராம் தூயஆவியார் உடனிருப்பார் என்ற உறுதியை வழங்குகிறார். இளையோரை மையப்படுத்தி, நடைபெறும் இந்த ஆயர் மாமன்றக் கூட்டத்தின் துவக்கத்திலும், நாம், இயேசு வாக்களித்த துணையாளரின் உதவியை நாடுவோம். அத்துடன், முதியவர்கள் அனைவரும், நம் கனவுகளையும் நம்பிக்கைகளையும் இளையோரோடு பகிர்ந்துகொள்வோம்.       கனவு காணுதல் மற்றும் நம்பிக்கையுடனிருத்தல் என்ற கொடைகளால் அருள்பொழிவு செய்யப்பட்டவர்களாக வாழும் வரத்தை, ஆயர் மாமன்றத் தந்தையருக்கு, தூய ஆவியானவர் வழங்குவாராக.

நம் இதயங்களைத் தூண்டிவிட்டு, தூய ஆவியாரின் வழிகளை நாம் கண்டுகொள்ள இது உதவுவதாக. தூய ஆவியாரின் குரலை அமைதியுடன் செவிமடுக்க, உலகின் பல பகுதிகளிலிருந்தும், ஆயர்கள் கூடிவந்திருக்கும் இவ்வேளையில், முதன்முறையாக, சீனாவிலிருந்தும் இரு ஆயர்கள், மாமன்றத்தில் கலந்துகொள்ள வந்துள்ளது குறித்து மகிழ்வோம்.

நம்பிக்கையால் அருள்பொழிவுச் செய்யப்பட்டவர்களாக, இந்த ஆயர்கள் மாமன்றக் கூட்டத்தைத் துவக்குவோம். அலைகடலில் தத்தளிப்பவர்களாக, விசுவாச சமூகத்தின் துணையற்ற அநாதைகளாக, வாழ்வின் பொருளும், வாழ்க்கைப் பாதையின் வழியும் தெரியாதவர்களாக, இளையோரை எண்ணிப்பார்க்கும் நம் மன நிலைகளைக் கைவிட்டு, நம் பார்வையையும் இதயத்தையும் விரிவுபடுத்த முன்வருவோம். இளையோரின் கண்களை உற்றுநோக்கி, அவர்களின் நிலைகளைப் புரிந்துகொள்ள முயல்வோம். நிச்சயமற்ற நிலை, ஒதுக்கிவைத்தல், வன்முறை பொன்றவற்றை, நம்பிக்கையின் துணைகொண்டு, இளையோருக்கு மாற்றியமைப்போம்.

இளையோர், மாண்பு நிறைந்த வழியில் தங்கள் வாழ்வை முன்னோக்கி எடுத்துச் செல்லும்போது, தடையாக இருப்பனவற்றை அகற்ற உதவுமாறு, நம்மை நோக்கிக் கேட்கின்றனர். அவர்களின் வாழ்வை இருளாக்கும், மற்றும், அடக்கி ஒடுக்கும் தடைகளிலிலிருந்து விடுவிக்க உதவும் வகையில் நம் அர்ப்பணத்தை அவர்கள் கேட்கின்றனர். ‘நீங்கள் யாவரும் உங்களைச் சார்ந்தவற்றில் அல்ல, பிறரைச் சார்ந்தவற்றிலேயே அக்கறை கொள்ள வேண்டும்’ (பிலி. 2:4),  என்ற தூய பவுலின் வாரத்தைகள், இன்று, கனவு காணும் நம் தேவைக்கு அவசியமானதாக உள்ளன. நாம் தன்னலம் கருதாதவர்களாக, ஒருவருக்கொருவர் செவிமடுப்பவர்களாக செயல்படவேண்டிய அவசியம் உள்ளது. நேர்மையாக, செப உதவியுடன் நாம் பிறருக்கு செவிமடுக்கும்போது, இறைமக்களின் நிலைகளைப் புரிந்துகொள்ள அது உதவும்.  மக்களின் அழுகுரல்களுக்கு செவிமடுக்கும்போது, நம்மை அழைக்கும் கடவுளின் விருப்பத்தைப் புரிந்துகொள்ளலாம்.

அன்பு சகோதர சகோதரிகளே, இத்தருணத்தை, அன்னை மரியாவின் பாதுகாப்பில் ஒப்படைப்போம்.

அன்பு ஆயர் மாமன்ற தந்தையரே,

மாண்பு, சுதந்திரம், தனி மனித உரிமை போன்றவற்றை உள்ளடக்கிய சமூகத்தை இளையோர் கட்டியெழுப்பவேண்டும் என்பதில் திருஅவை ஆர்வமாக உள்ளது. இளையோர், தங்கள் வாழ்வில், நம்பிக்கையை வெளிப்படுத்தி, தங்கள் வாழ்வுக்கு அர்த்தம் கொடுப்பவைகளில் நம்பிக்கை வைக்கட்டும். சுயநலப் போக்குகளை அவர்கள் கைவிடட்டும். வன்முறைக்கும் பகைமைக்கும் இட்டுச் செல்லும் வழிகளைக் கைவிட்டு, தராள மனதுடையவர்களாகவும், தூய மனதினராகவும், நேர்மையாளர்களாகவும், பிறரை மதிப்பவர்களாகவும் இளையோர் மாறுவார்களாக.

இவ்வாறு தன் மறையுரையை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 October 2018, 12:54