தேடுதல்

Vatican News
உலக ஆயர்கள் மாமன்ற நிறைவுத் திருப்பலி -281018 உலக ஆயர்கள் மாமன்ற நிறைவுத் திருப்பலி -281018  (ANSA)

மீட்பின் தேவை குறித்த உணர்வே, விசுவாசத்தின் துவக்கம்

திருத்தந்தை : பிறருக்கு செவிமடுப்பது, பிறரை நமக்கு அடுத்திருப்பவராக ஏற்று உதவுவது, நம் வாழ்வு வழி சான்று பகர்வது ஆகியவை, விசுவாசத்தின் மூன்று கூறுகள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

செவிமடுப்பது, அருகிருப்பது, மற்றும், சாட்சி பகர்வது என்ற மூன்று நிலைகளும் விசுவாசப் பயணத்தின் முக்கியப் படிகள் என இஞ்ஞாயிறு திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உலக ஆயர்கள் மாமன்றத் தந்தையர்களுடனும், அதில் பங்குபெற்ற ஏனைய உறுப்பினர்களுடனும் மாமன்ற நிறைவுத் திருப்பலியை, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில், அக்டோபர் 28, இஞ்ஞாயிறன்று நிறைவேற்றியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு வாசகம் எடுத்துரைத்த, பார்வைத் திறனற்ற பர்த்திமேயுவை மையப்படுத்தி மறையுரையாற்றினார்.

பர்த்திமேயுவை அமைதியாக இருக்கும்படி அருகிலிருந்தோர் கேட்டுக்கொண்டிருக்க, இயேசுவோ, அவர் அருகே சென்று, அவருக்கு செவிமடுக்க விரும்பினார் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விசுவாசப் பயணத்தில், பிறருக்குச் செவிமடுப்பதே, முதல் நிலை என்றுரைத்தார்.

நம் வாழ்க்கைப் பயணத்தில் நம்மை நோக்கிக் கூக்குரல் எழுப்புவோருக்கு செவி மடுப்பதை, ஒரு தடையாக நோக்காமல், ஒரு சவாலாக நோக்குவதற்கு, இயேசு நமக்குக் கற்றுத் தருகிறார் என்றுரைத்த திருத்தந்தை, நம் செபங்களுக்கு இறைவன் செவிமடுப்பதுபோல், நாமும் பிறருக்கு செவிமடுக்க முன்வர வேண்டும் என்றார்.

இளையோர் குரல்களுக்கு செவி மடுக்க, இதயங்களை திறக்க மறுத்து, இளையோரின் காதுகளை மட்டும் நிறைப்பதில் கவனமாக இருந்திருந்தால், அதற்காக அவர்களிடம் தான் மன்னிப்புக் கேட்க விரும்புவதாக உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  இளையோரின் குரல்களுக்கு செவிமடுக்கும் இதயத்தைத் தருமாறு இறைவனிடம் வேண்டுவோம் எனவும் எடுத்துரைத்தார்.

நம் விசுவாசப்பயணத்தில், முதலில் பிறருக்கு செவிமடுத்தபின், அவர் அருகே அமர்ந்து, அவரை நம் அடுத்திருப்பவராக ஏற்றுக் கொள்வது அவசியம் எனவும், தன் மறையுரையில் கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு, பர்த்திமேயுவிடம்,  தானே சென்று அவர் தேவை குறித்து விசாரித்தாரேயொழிய, ஒரு பிரதிநிதியை தன் சார்பாக அனுப்பவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார்.

விசுவாசப் பயணத்தின் மூன்றாம் நிலையாக, சாட்சி பகர்தலைப் பற்றிக் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் சகோதர சகோதரிகள் நம் கதவை வந்து தட்டும்வரை நாம் காத்திராமல், இயேசுவின் செய்தியுடன் நாம் அவர்களை நோக்கிச் செல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

நாம் பாவிகளாக இருக்கின்றபோதிலும், நம் அருகே எப்போதும் இருக்கும் இயேசுவைப்போல், நாமும், அவர் மீது கொண்ட அன்பினால், நம் அருகிருப்போருக்கு புதிய வாழ்வை கொணர்பவர்களாக மாறுவோம் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.

'எழுந்து செல். உன் விசுவாசம் உன்னை குணமாக்கிற்று' என இயேசு கூறும் வார்த்தைகளை தன் மறையுரையில் நினைவூட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் மீட்படைய வேண்டியவர்கள் என உணர்வதே, விசுவாசத்தின் துவக்கம் எனவும் கூறினார்.

29 October 2018, 15:13