தேடுதல்

இளையோருடன் திருத்தந்தை இளையோருடன் திருத்தந்தை 

இளையோரின் விடைகள் அச்சமற்றதாக வெளிப்பட வேண்டும்

நன்மையைத் தேடிய பயணத்தில், முதலில் நம்மையே நாம் கண்டுகொள்ள வேண்டும். வாழ்வோடு இணங்கிச் செல்வதாக நம் பயணம் இருக்கட்டும் – இளையோரிடம் திருதந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இளையோராகிய நீங்கள் விற்பனைக்கல்ல, ஒருங்கிணைந்திருங்கள். கைப்பேசிகளுக்கு அடிமையாகாதீர்கள்', என்ற வார்த்தைகளை இளையோருக்கு வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கானில் இடம்பெறும் இளையோர் குறித்த உலக ஆயர் மாமன்றத்துடன் தொடர்புகொண்ட ஒரு முக்கிய நிகழ்வாக, சனிக்கிழமை மாலை, ஏறத்தாழ 7000 இளையோரை அருளாளர் ஆறாம் பவுல் அரங்கில் சந்தித்து உரையாடியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளையோரின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில், கேள்விகளுக்கான விடைகள் நம் அனைவரிடமிருந்தும் வரவேண்டும், அதுவும் அச்சமின்றி வருவதாக இருக்கவேண்டும் என்றார்.

சாட்சியங்கள், நடனங்கள், இசை நிகழ்ச்சிகள் என பல்வேறு திறமைகளின் வெளிப்பாடுகளாக இடம்பெற்ற இச்சந்திப்பில் உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளையோருக்கு சில வழிமுறைகளையும் பரிந்துரைத்தார்.

நன்மையை நோக்கிய நம் தேடுதலில், நம்மையே நாம் கண்டறிதல் நம் முதல்படியாக இருக்கவேண்டும் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் ஓரிடத்தில் சுகமாக அமர்ந்துவிடாமல் முன்னோக்கி நடைபோட்டுக்கொண்டே இருக்கவேண்டும், அதுவும் வாழ்வோடு இணைந்து செல்வதாக இருத்தல் வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

உலகின் பல நிலைகளிலும், சரிநிகரற்ற தன்மைகள் நிலவுவதையும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதிகாரம் என்பது, செவை புரிவதற்கே, மற்றவர்களை அடிமையாக்குவதற்கல்ல என்பதையும் எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 October 2018, 16:35