தேடுதல்

Vatican Pope Angelus Vatican Pope Angelus 

ஆயர்கள் மாமன்றம் அளித்த நிறைவு - மூவேளை செப உரை

தூய ஆவியார் வழங்கும் தெளிந்து தேர்தல் என்ற கொடை, இம்மாமன்றத்தின் வழியே, திருஅவைக்கு வழங்கப்பட்டுள்ளது – திருத்தந்தையின் மூவேளை செப உரை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஆண்டின் பொதுக்காலம் 30ம் ஞாயிறு வழிபாட்டிற்கு வழங்கப்பட்ட வாசகங்களையும், இஞ்ஞாயிறன்று நிறைவுக்கு வந்த 15வது உலக ஆயர்கள் மாமன்றத்தையும் இணைத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் ஞாயிறு மூவேளை செப உரையை வழங்கினார்.

அக்டோபர் 28, ஞாயிறு, காலை 10 மணிக்கு, ஆயர்கள் மாமன்றத்தின் நிறைவுத் திருப்பலியை, புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் தலைமையேற்று நடத்திய திருத்தந்தை, இத்திருப்பலிக்குப் பின், வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு மூவேளை செப உரை வழங்கியபோது, இஞ்ஞாயிறு முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எரேமியா கூறியுள்ள நம்பிக்கை, இன்றைய மக்களுக்கும் பொருத்தமாக உள்ளதென்று கூறினார்.

உலக ஆயர்கள் மாமன்றம் குறித்து திருத்தந்தை மகிழ்வு

கடந்த சில வாரங்கள் நடைபெற்ற உலக ஆயர்கள் மாமன்றம், கடினமான பணியாக இருந்தாலும், நம்பிக்கையூட்டும் விளைவுகளை உருவாக்கியுள்ளது என்பதை, திருத்தந்தை தன் உரையில் மகிழ்வோடு குறிப்பிட்டார்.

செவிமடுத்தல் என்ற சிறந்த பாடத்தை, ஆயர்கள் மாமன்றத்தில் கலந்துகொண்ட அனைவரும் கற்றுக்கொண்டனர் என்றும், தூய ஆவியார் வழங்கும் தெளிந்து தேர்தல் என்ற கொடை, இம்மாமன்றத்தின் வழியே, திருஅவைக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும், திருத்தந்தை இவ்வுரையில் சுட்டிக்காட்டினார்.

உலக ஆயர்கள் மாமன்றத்தின் நோக்கம், ஓர் ஏட்டை வெளியிடுவது அல்ல என்று தன் மூவேளை செப உரையில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளையோரின் உலகில் நிலவும் எதார்த்தங்களைக் காண்பதற்கு, மாமன்றம் நல்லதொரு தருணமாக அமைந்தது என்று கூறினார்.

பிட்ஸ்பர்க் வன்முறைக்கு திருத்தந்தையின் வருத்தம்

மேலும், அமெரிக்க ஐக்கிய நாட்டின் பிட்ஸ்பர்க் நகரில், யூத தொழுகைக்கூடத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலியானோருக்காக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மூவேளை செப உரையின் இறுதியில் தன் ஆழ்ந்த அனுதாபங்களையும், அருகாமையையும் வெளியிட்டார்.

இந்த வன்முறையால் உயிரிழந்தோரை இறைவன் தன் அமைதியில் வரவேற்று ஏற்றுக்கொள்ளவும், காயப்பட்டோரைக் குணமாக்கவும், உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு ஆறுதல் வழங்கவும் தான் செபிப்பதாக, திருத்தந்தை கூறினார்.

வெறுப்பை, அன்பினால் வெல்ல வேண்டுதல்

இத்தகைய வன்முறைகளால் நாம் அனைவருமே காயப்படுகிறோம் என்பதை எடுத்துரைத்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நமது சமுதாயத்தில் வளர்ந்துவரும் வெறுப்பை, அன்பினால் வெல்லவும், உயிர்களை மதிக்கவும், இறைவன் நம் அனைவருக்கும் பாடங்கள் புகட்டவேண்டும் என்று கூறினார்.

பிட்ஸ்பர்க் நகரின் 'Tree of Life' என்ற யூத தொழுகைக்கூடத்தில், அக்டோபர் 27, சனிக்கிழமை, ஓய்வுநாள் வழிபாடு நிகழ்ந்த வேளையில், ராபர்ட் போவெர்ஸ் (Robert Bowers) என்பவர் மேற்கொண்ட துப்பாக்கித் தாக்குதலில், 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 October 2018, 13:20