தேடுதல்

ஆயர் மாமன்ற கூட்டத்தில் திருத்தந்தை ஆயர் மாமன்ற கூட்டத்தில் திருத்தந்தை 

நாம் பாவிகள் எனினும், நம் தாயாம் திருஅவை புனிதமானவர்

திருஅவை மீது தீயோன் சுமத்தி வரும் மிகப்பெரும் குற்றச்சாட்டுகள், திருஅவை மீதான சித்ரவதைகளுக்கு ஒப்பானவை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஆயர் மாமன்றக் கூட்டம் என்பது, தூய ஆவியார் செயலாற்றும் இடம், இந்த மாமன்றம் உருவாக்கியுள்ள ஏடு, வெறும் காகிதம் அல்ல, அது நமக்குள் புகுந்து செயலாற்ற வேண்டும் என, கடந்த சனிக்கிழமை மாலை, இறுதி அமர்வின் முடிவில் உரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆயர் மாமன்றக் கூட்டம் என்பது ஒரு பாராளுமன்றம் அல்ல, அது தூய ஆவியார் செயலாற்றுவதற்குரிய பாதுகாப்பு நிறைந்த இடம் என்று கூறியத் திருத்தந்தை, இங்கு தயாரிக்கப்பட்டுள்ளது வெறும் ஏடு அல்ல, நம் இதயங்களுக்குள் செயலாற்ற தூய ஆவியாரால் வழங்கப்பட்டுள்ள ஏடு என்பதையும் தெளிவுபடுத்தி, இந்த ஏட்டுடன் நாம் செபித்து, அதனை ஆழமாகப் படித்து, அதிலிருந்து ஒளியைப் பெறுவோம் என மேலும் கூறினார்.

திருஅவையின் உறுப்பினர்களாகிய நாம் அனைவரும் பாவிகள் எனினும், நம் தாயாம் திருஅவை, புனிதமானவர் என்பதால், அந்த அன்னையைக் களங்கப்படுத்த நாம் அனுமதிக்கக் கூடாது என்று எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவை மீது, தீயோன் சுமத்தி வரும் மிகப்பெரும் குற்றச்சாட்டுகள், திருஅவை மீது அவன் மேற்கொள்ளும் சித்ரவதைகளுக்கு ஒப்பானவை என்று வலியுறுத்திக் கூறினார்.

திருஅவையைத் தாக்கும் தீயோன், அதன் வழியாக, அன்னை மரியாவையும் தாக்க முயல்கின்றான் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செபத்தின் உதவியுடன், தாயாம் திருஅவையைக் காப்போம் என அழைப்பு விடுத்தார்.

மேலும், இளையோர் மீதான நம்பிக்கையையும், எதிர்நோக்கையும், ஆறுதலையும் உள்ளடக்கியதாக, மாமன்றத் தந்தையரால் உருவாக்கப்பட்ட ஒரு மடல், மாமன்ற நிறைவுத் திருப்பலியின் இறுதியில், ஆயர்களின் சார்பில் வாசிக்கப்பட்டது.

ஆயர் மாமன்றங்களின் பொதுச்செயலர் கர்தினால் லொரென்ஸோ பால்திஸ்ஸேரி அவர்களால் வாசிக்கப்பட்ட இம்மடல், இளையோரின் மகிழ்வு, நம்பிக்கை, வருத்தங்கள், வேதனைகளை உள்ளடக்கிய அவர்களின் ஆழ்மனத் தேடுதல்களில் அவர்களுடன் இணைந்து நடக்க மாமன்றத் தந்தையர்கள் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கிறது.

வாழ்வின் ஓரத்திற்குத் தள்ளப்பட்டுள்ள எழை மக்களை, இளையோர் தங்கள் பயணத்தில் இணைத்துக் கொள்ளவேண்டும் என்ற அழைப்பையும், மாமன்றத் தந்தையரின் மடல் முன் வைத்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 October 2018, 15:26