தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ் 

'ஒருவரையொருவர் அன்புடன் தாங்கிக்கொள்ளுங்கள்'

"ஒருமைப்பாட்டைக் காக்க, 'ஒருவரையொருவர் அன்புடன் தாங்கிக்கொள்ளுங்கள்' என்று, புனித பவுல் அறிவுரை வழங்குகிறார்" - திருத்தந்தையின் டுவிட்டர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் வளர்க்க திருத்தூதர் பவுல் கூறும் அறிவுரைகளை மையப்படுத்தி இவ்வெள்ளி காலையில் மறையுரை வழங்கியத் திருத்தந்தை, அதன் தொடர்ச்சியாக அக்கருத்தை, தன் டுவிட்டர் செய்தியிலும் பகிர்ந்துகொண்டார்.

"நம்மிடையே ஒருமைப்பாட்டைக் காப்பதற்கு, 'ஒருவரையொருவர் அன்புடன் தாங்கிக்கொள்ளுங்கள்' என்று, புனித பவுல், நடைமுறைக்கு ஏற்ற அறிவுரையை வழங்குகிறார்" என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியாக இவ்வெள்ளியன்று வெளியிட்டார்.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அக்டோபர் 25, வியாழனன்று வழங்கிய மறையுரையின் இறுதியில் "ஆண்டவரே, இயேசுவே உம்மை நான் அனுபவத்தில் உணர வரம் தாரும், இதனால் நான் உம்மைப் பற்றி பேசும்போது, கிளிப்பிள்ளை போல வார்த்தைகளை சொல்லிக்கொண்டிராமல், உள்ளத்திலிருந்து பேசும் வரம் தாரும்" என்ற செபத்தை இணைத்தார்.

இச்செபத்தின் சுருக்கத்தை வெளிப்படுத்தும்வண்ணம், தன் இரண்டாவது டுவிட்டர் செய்தியை இவ்வியாழனன்று வெளியிட்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "ஒவ்வொரு நாளும், ஏதாவதொரு தருணத்தில், 'ஆண்டவரே, உம்மையும் என்னையும் அறிந்துகொள்வேனாக' என்று சொல்வது அற்புதமாக இருக்கும்" என்ற சொற்களை, தன் டுவிட்டர் செய்தியாகப் பதிவு செய்திருந்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 October 2018, 15:41