தேடுதல்

புனித இரண்டாம் ஜான்பால் அவர்களின் திருநாளையொட்டி, அப்புனிதரின் கல்லறை முன் திருத்தந்தை பிரான்சிஸ். புனித இரண்டாம் ஜான்பால் அவர்களின் திருநாளையொட்டி, அப்புனிதரின் கல்லறை முன் திருத்தந்தை பிரான்சிஸ். 

மறைப்பணிகளின் இதயமாக விசுவாசப் பரப்புதல்

இறைவன் நம்மை கைவிடுவதில்லை. குடிபெயர்வோருடன் ஒருமைப்பாட்டை வெளியிட்டு, அவர்களுடன் பயணத்தை பகிர்வோம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

"இறைவன் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார் என்ற உண்மையைப் புரிந்துகொள்ள, புனிதர்களோடு நாம் கொள்ளும் உறவு உதவியாக உள்ளது. இதன் விளைவாக, நாம் இவ்வுலகில், நம்பிக்கைக்கு சான்று பகர்பவர்களாக வாழமுடியும்" என்ற சொற்களை, இத்திங்களன்று, தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், அக்டோபர் 22, இத்திங்களன்று, திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களின் திருநாள் சிறப்பிக்கப்பட்டதையொட்டி, புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், அப்புனிதரின் கல்லறை அமைந்துள்ள பீடத்தில், இத்திங்கள் காலை சிறிது நேரம் அமைதியில் செபித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இதற்கிடையே, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட உலக மறைபரப்புப்பணி நாளைக் குறித்தும், புலம்பெயர்ந்தோர், குடியேற்றதாரர் ஆகியோருக்கு ஆதரவாக உரோம் நகரிலும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் அம்மக்களுடன் இணைந்து 'பயணத்தைப் பகிர்வோம்' என்ற நடைபயணம் இடம்பெற்றதைக் குறித்தும், இரு டுவிட்டர் செய்திகளை ஞாயிறன்று வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

'திருஅவை மறைப்பணிகளின் இதயமாக விளங்கும், விசுவாசத்தைப் பகிர்தல் என்பது, ஒருவரையொருவர் தொற்றிக் கொள்ளும் அன்பிலிருந்து வருகிறது', என தன் முதல் டுவிட்டர் செய்தியிலும், 'காரித்தாஸ் இயக்கத்துடன், புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்வோருடன் இணைந்து 10 இலட்சம் கிலோ மீட்டர் நடந்து செல்வோம். இயேசுவின் முகத்தைக் காண்பதற்கு அழைக்கப்பெற்றுள்ள நாம் அனைவரும், எம்மாவுஸ் சாலையில் நடந்து செல்கிறோம்' என தன் இரண்டாம் டுவிட்டர் செய்தியிலும் எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

குடிபெயர்வோர் மற்றும் புலம்பெயர்வோருடன் நம் ஒருமைப்பாட்டைத் தெரிவிக்கும் விதமாக, உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கர்கள், புலம்பெயர்வோருடன் மேற்கொள்ளும் பயணங்களால் 10 இலட்சம் கிலோமீட்டர்களை இரண்டாண்டுகளில் எட்டவேண்டும் என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த ஆண்டு அழைப்பு ஒன்றை விடுத்திருந்தது, இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 October 2018, 16:35