Kazakistanன் Astana நகரம் Kazakistanன் Astana நகரம் 

"#அனைவருக்கும் நலம்" - திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

"உடல்நலம் ஒரு நுகர்வுப்பொருள் அல்ல, மாறாக அது, உலகளாவிய உரிமை: எனவே, அனைவருக்கும் நலவாழ்வு உதவிகள் கிடைப்பதற்கு நம் முயற்சிகளை இணைப்போமாக" - திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

"#அனைவருக்கும் நலம்" (#HealthForAll) என்ற ‘ஹாஷ்டாக்’ குறியீட்டுடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தி, அடிப்படை உடல் நலப் பராமரிப்பு, அனைவரையும் அடையவேண்டிய ஓர் உலகளாவிய உரிமை என்பதை வலியுறுத்தியுள்ளது.

"உடல்நலம் ஒரு நுகர்வுப்பொருள் அல்ல, மாறாக அது, உலகளாவிய உரிமை: எனவே, அனைவருக்கும் நலவாழ்வு உதவிகள் கிடைப்பதற்கு நம் முயற்சிகளை இணைப்போமாக" என்ற சொற்களை, திருத்தந்தை தன் டுவிட்டர் செய்தியாக, அக்டோபர் 25, இவ்வியாழனன்று வெளியிட்டுள்ளார்.

அக்டோபர் 25, 26 ஆகிய இரு நாள்கள், கசக்ஸ்தான் நாட்டின், அஸ்தானா நகரில் உலக நலவாழ்வு நிறுவனம், ஐ.நா.வின் அனைத்துலக குழந்தைகள் நலவாழ்வு அவசர நிதி உதவி நிறுவனமான யூனிசெஃப், கசக்ஸ்தான் அரசு ஆகிய மூன்றும் இணைந்து, அடிப்படை நலவாழ்வு பராமரிப்பு என்ற தலைப்பில், ஒரு பன்னாட்டு கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளன.

கசக்ஸ்தான் நாட்டில், முன்பு, ஆல்மா-ஆட்டா என்றழைக்கப்பட்ட அல்மாட்டி நகரில், 1978ம் ஆண்டு, 'அனைவருக்கும் நலம்' என்ற மையக்கருத்துடன் நடத்தப்பட்ட ஒரு பன்னாட்டு கருத்தரங்கின் 40ம் ஆண்டு நினைவை சிறப்பிக்கும் வகையில், இவ்வாண்டு, அஸ்தானா நகரில், மீண்டும் ஒருமுறை பன்னாட்டு கருத்தரங்கு நடைபெறுகிறது.

அனைவருக்கும் நலம் கிடைப்பதும், குறிப்பாக, அனைவருக்கும் அடிப்படை நல உதவிகள் கிடைப்பதும், 21ம் நூற்றாண்டில் நிறைவேற்றப்பட வேண்டிய ஓர் இலக்கு என்று ஐ.நா. அவையும், உலக நலவாழ்வு நிறுவனமும் அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 October 2018, 14:17