தேடுதல்

Vatican News
ஆயர் மாமன்றக் கூட்டத்தில் திருத்தந்தை ஆயர் மாமன்றக் கூட்டத்தில் திருத்தந்தை  (AFP or licensors)

இந்தோனேசியாவிற்கு திருத்தந்தை அனுப்பிய ஒரு இலட்சம் டாலர்கள்

"தன் இளமையின் திட்டவட்டமான ஒரு தருணத்தில், அசிசி நகர் புனித பிரான்சிஸ், நற்செய்தியை வாசித்தார்" – திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அக்டோபர் 4, இவ்வியாழனன்று, அசிசி நகர் புனித பிரான்சிஸ் திருநாள் கொண்டாடப்பட்டதையும், அக்டோபர் 3, வத்திக்கானில், இளையோரை மையப்படுத்தி உலக ஆயர்கள் மாமன்றம் துவங்கியுள்ளதையும் இணைத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழனன்று, தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டார்.

"தன் இளமையின் திட்டவட்டமான ஒரு தருணத்தில், அசிசி நகர் புனித பிரான்சிஸ், நற்செய்தியை வாசித்தார். இன்றும், நற்செய்தி, வாழும் இயேசுவை அறிந்துகொள்ள உதவுகிறது; உன் உள்ளத்தில் பேசி, உன் வாழ்வை மாற்றுகிறது" என்ற சொற்களை, திருத்தந்தை, @pontifex என்ற தன் டுவிட்டர் முகவரியில் வெளியிட்டார்.

மேலும், அக்டோபர் 3, இப்புதனன்று காலை, ஆயர்கள் மாமன்றத் திருப்பலிக்கு முன்னதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு பசிலிக்காவில் அமைந்துள்ள 'பியெத்தா' அன்னை மரியா திரு உருவத்திற்கு முன், சீனாவிலிருந்தும் வியட்நாமிலிருந்தும் வந்திருந்த திருப்பயணிகளைச் சந்தித்தார்.

இதற்கிடையே, இந்தோனேசியாவின் நிலநடுக்கத்தில் பாதிக்கபப்ட்டோருக்கு அவசர உதவிகள் செய்வதற்கென, 1 இலட்சம் டாலர்கள் நிதி உதவியை திருத்தந்தை அனுப்பி வைத்துள்ளார் என்று, ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருஅவை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

04 October 2018, 15:27