தேடுதல்

மழையில் நனைந்தபடி மூவேளை செப உரைக்கு செவிமடுத்த மக்கள் கூட்டம் மழையில் நனைந்தபடி மூவேளை செப உரைக்கு செவிமடுத்த மக்கள் கூட்டம் 

திருமணத்தின் மாண்பு – திருத்தந்தையின் மூவேளை செப உரை

தனிமனித விருப்பு வெறுப்புகளும், தன்னையே நிறைவு செய்யவேண்டும் என்ற ஆசைகளும் மேலோங்கும்போது, திருமண உறவு நிலைத்திருக்க சிரமப்படுகிறது - திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஒருவருக்கொருவர் விசுவாசமாக இருக்கவேண்டிய பண்பை உள்ளடக்கிய அன்பின் ஒன்றிப்பாக விளங்கும் திருமணத்தின் மாண்புக்கு ஆதரவாக இயேசு பேசுகிறார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு வழங்கிய மூவேளை செப உரையில் கூறினார்.

வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு, மூவேளை செப உரை வழங்கியத் திருத்தந்தை, மணமுறிவு பற்றி இஞ்ஞாயிறு நற்செய்தியில் எழுப்பப்பட்ட கேள்வியையும், அதற்கு இயேசு கூறிய பதிலையும் மையப்படுத்தி, கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

தம்பதியர், திருமண உறவில் ஒன்றித்திருப்பதன் முக்கிய காரணம், கிறிஸ்துவின் அருளால் ஊட்டம் பெற்றவர்களாக, ஒருவருக்கொருவர் தங்களையே அன்பில் அவர்கள் கையளிப்பதே என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.

தனிமனித விருப்பு வெறுப்புகளும், தன்னையே நிறைவு செய்யவேண்டும் என்ற ஆசைகளும் மேலோங்கும்போது, திருமண உறவு நிலைத்திருக்க சிரமப்படுகிறது என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மணமுறிவு நோக்கி அழைத்துச் செல்லும் எதையும் இயேசு அங்கீகரிப்பதில்லை என்று வலியுறுத்திக் கூறினார்.

காயம்பட்ட அன்பு, இறைவன் வழங்கும் இரக்கம், மற்றும் மன்னிப்பின் வழியே குணம் பெறுகிறது என்பதை மனதில் கொண்டு, கடவுளின் மக்களை மீண்டும் திருஅவைக்குள் கொண்டுவர, பிறரன்பு, மற்றும் கருணையை நாம் பின்பற்றுவோம் என்று அழைப்பு விடுத்தார், திருத்தந்தை.

மேலும், செபமாலை அன்னை மரியாவின் திருநாள் இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்டதையொட்டி, இத்தாலியின் பொம்பேயி (Pompei) திருத்தலத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவைக்காக தினசரி செபமாலை செபிக்குமாறு அழைப்பு விடுத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 October 2018, 13:07