திருத்தந்தையுடன் கொலம்பிய அரசுத் தலைவர் திருத்தந்தையுடன் கொலம்பிய அரசுத் தலைவர் 

திருத்தந்தையைச் சந்தித்த கொலம்பிய குடியரசின் அரசுத்தலைவர்

கொலம்பியா நாட்டில், அரசுக்கும், பிற புரட்சிக் குழுக்களுக்கும் இடையே நிகழ்ந்த ஒப்புரவில், கத்தோலிக்க திருஅவை மேற்கொண்ட முயற்சிகள் குறித்து அரசுத்தலைவர் மகிழ்ச்சி

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

அக்டோபர் 22, இத்திங்கள் காலை திருத்தந்தையையும், திருப்பீட அதிகாரிகளையும் சந்தித்த கொலம்பிய அரசுத்தலைவர், Iván Duque Márquez அவர்கள், இலத்தீன் அமெரிக்க அரசியல் சூழல்கள் குறித்தும், குடிபெயர்வோர் பிரச்சனை குறித்தும், இச்சந்திப்புக்களில் பேசியதாக, திருப்பீடம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

அரசுத்தலைவர் Márquez அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து உரையாடியபின், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் நேரடிச் செயலர், பேரருள்திரு Antoine Camilleri அவர்களையும் சந்தித்தார்.

கொலம்பியாவுக்கும், வத்திக்கானுக்கும் இடையே நிலவும் நல்லுறவுகள் குறித்தும், குறிப்பாக, கொலம்பியா நாட்டில் அரசுக்கும், பிற புரட்சிக் குழுக்களுக்கும் இடையே நிகழ்ந்த ஒப்புரவில், கத்தோலிக்க திருஅவை மேற்கொண்ட முயற்சிகள் குறித்தும் இச்சந்திப்புக்களில் பேசப்பட்டன.

இன்றைய கொலம்பிய சமுதாயம் எதிர்நோக்கும் சில பிரச்சனைகள், குறிப்பாக, போதைப்பொருள் வர்த்தகம், இலஞ்ச ஊழல், சுற்றுச்சூழல், மற்றும், வாழ்வைப் பாதுகாப்பதில் உருவாகும் சிக்கல்கள் ஆகியவை குறித்து கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன என்று, திருப்பீடத் தகவல் தொடர்புத்துறை வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

மேலும், இத்திங்களன்று, லெபனான் மாரனைட் வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, கர்தினால் Béchara Boutros Rai அவர்களையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பீடத்தில் சந்தித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 October 2018, 16:48