திருத்தந்தையுடன் Scalabrinian மறைபரப்புப் பணியாளர்கள் திருத்தந்தையுடன் Scalabrinian மறைபரப்புப் பணியாளர்கள் 

உயிர்த்த கிறிஸ்துவை அறிவிப்பது ஒன்றே, திருஅவையின் முக்கிய பணி

131 ஆண்டுகளுக்கு முன், இவ்வுலகம் சந்தித்த குடிபெயர்தல் என்ற பிரச்சனையைத் தீர்க்க புனித Charles Borromeo உருவாக்கிய துறவு சபை, இன்றும், மிகக் கடினமானச் சூழல்களில் தன் பணிகளை ஆற்றிவருகிறது – திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

உலகெங்கும் இன்று நிலவிவரும் குடிபெயர்தல் என்ற எதார்த்தத்தை பல ஆண்டுகளுக்கு முன்னரே உணர்ந்தவர், புனித Charles Borromeo என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த ஒரு துறவு சபையின் உலகப் பிரதிநிதிகளிடம் கூறினார்.

Scalabrinian மறைபரப்புப்பணியாளர்களுடன் திருத்தந்தை

புனித Charles Borromeoவின் மறைபரப்புப்பணியாளர்கள் அல்லது, Scalabrinian மறைபரப்புப்பணியாளர்கள் என்றழைக்கப்படும் துறவு சபையின் உலகப் பொது அவையில் பங்கேற்ற பிரதிநிதிகள் 45 பேரை, அக்டோபர் 29, இத்திங்கள் காலை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, இந்தப் பொதுஅவையின் மையக்கருத்தாக எம்மாவு பயணம் தெரிவு செய்யப்பட்டுள்ளது பொருத்தமான கருத்து என்று கூறினார்.

எம்மாவு பயணத்தில் இயேசு தன் சீடர்களின் கருத்துக்களுக்கு செவிமடுத்ததுபோல், இன்றைய உலகில் நற்செய்தியைப் பரப்பும் பணியில், செவிமடுத்தல் என்பது முக்கியமான ஓர் அம்சம் என்று திருத்தந்தை தன் உரையில் எடுத்துரைத்தார்.

131 ஆண்டுகளுக்கு முன், இவ்வுலகம் சந்தித்த குடிபெயர்தல் என்ற பிரச்சனையைத் தீர்க்க, புனித Charles Borromeo உருவாக்கிய இத்துறவு சபை, இன்றும், மிகக் கடினமானச் சூழல்களில் தன் பணிகளை ஆற்றிவருவதற்கு, திருத்தந்தை தன் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

உயிர்த்த கிறிஸ்துவை அறிவிப்பது ஒன்றே, திருஅவையிலும், ஒவ்வொரு துறவு சபையிலும் விளங்கவேண்டிய முக்கிய பணி என்று எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த அடிப்படை உண்மையை மறந்துவிட்டால், நாம் ஆற்றும் பணிகள், வெறும் சமுதாய முன்னேற்ற பணியாக மாறிவிடும் ஆபத்து உள்ளது என்று Scalabrinian மறைபரப்புப்பணியாளர்கள் சபையின் உலகப் பிரதிநிதிகளிடம் கூறினார்.

Viviers மறைமாவட்ட இளையோருடன் திருத்தந்தை

மேலும், பிரான்ஸ் நாட்டின் Viviers மறைமாவட்டத்திலிருந்து வந்திருந்த இளையோர் 30 பேரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 29, இத்திங்கள் காலை, திருப்பீடத்தில் சந்தித்து, வாழ்த்தினார்.

நற்செய்தியை அறிவிக்க, குறிப்பாக, வறியோரிடையே நற்செய்தியை அறிவிக்க Viviers மறைமாவட்டம் ஏற்பாடு செய்திருந்த ஒரு திருப்பயணத்தில், கடந்த ஒரு மாதமாகப் பங்கேற்றுவந்த இளையோர், இத்திருப்பயணத்தின் இறுதியில் தன்னைக் காண வந்திருப்பது குறித்து, திருத்தந்தை தன் பாராட்டுக்களையும், மகிழ்வையும் தெரிவித்து, அனைவரையும் ஆசீர்வதித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 October 2018, 14:52