தேடுதல்

அமெரிக்க விவிலியக் கழகத்தின் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அமெரிக்க விவிலியக் கழகத்தின் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் 

அமெரிக்க விவிலியக் கழகத்தினரைப் பாராட்டிய திருத்தந்தை

"அன்பில் நம்பிக்கை கொண்டு, பணிபுரிவதற்கென்றே வாழ்வதால், புன்முறுவல் பூக்கும் கிறிஸ்தவர்கள் நமக்குத் தேவை" – திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

"இறைவனின் வார்த்தை வழியே, வாழ்வை மாற்றுதல்" என்ற கொள்கையுடன் இயங்கி வரும் அமெரிக்க விவிலியக் கழகத்தின் பணியை பாராட்டுவதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்கழகத்திலிருந்து தன்னைச் சந்திக்க வந்திருந்த பிரதிநிதிகளிடம் கூறினார்.

அமெரிக்க விவிலியக் கழகத்தின் 40 பிரதிநிதிகளை, அக்டோபர் 31, இப்புதன் காலை, திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, மக்களின் வாழ்வை இறை வார்த்தையின் துணைகொண்டு மாற்றிவரும் அவர்களது பணியைத் தீவிரப்படுத்துமாறு ஊக்குவித்தார்.

இறைவனின் வாத்தையால் இவ்வுலகம் உருவானது (காண்க. தொ.நூ. 1:6-7) என்பதில் தொடங்கி, இறைவனின் வார்த்தையைக் குறித்து விவிலியத்தில் கூறப்பட்டுள்ள பல இறைவாக்கியங்களை திருத்தந்தை தன் உரையில் குறிப்பிட்டுப் பேசினார்.

இறைவனின் வார்த்தை மிகக் கூர்மையானது என்றும், அது உள்ளங்களை ஊடுருவிச் சென்று, அவற்றைத் தூய்மையாக்குகிறது என்றும் கூறியத் திருத்தந்தை, இறைவார்த்தை என்ற வாள், காயங்களை உருவாக்கினாலும், அவற்றின் வழியே நாம் நலமடைய வழி வகுக்கின்றது என்பதையும் எடுத்துரைத்தார்.

வாழ்வுக்கும், உண்மைக்கும் ஊற்றான இறைவனின் வார்த்தை, இவ்வுலகில் நிலவும் அனைத்து பொய்மைகளையும், இரட்டைவேடங்களையும் அழித்து, நாம் நேரிய வழியில் நடக்க, தொடர்ந்து சவால் விடுக்கின்றது என்பதை, திருத்தந்தை, அமெரிக்க விவிலியக் கழகத்தின் பிரதிநிதிகளிடம் கூறினார்.

1816ம் ஆண்டு, அமெரிக்க ஐக்கிய நாட்டின், நியூ யார்க் நகரில் நிறுவப்பட்ட அமெரிக்க விவிலியக் கழகம், ஏறத்தாழ உலகின் அனைத்து மொழிகளிலும் விவிலியத்தை மொழிபெயர்ப்பு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், "வாழ்வில் எதையும் எளிதாக எடுத்துக்கொள்வதால் அல்ல, மாறாக, இறைவனின் மகிழ்வால் நிறையப்பெற்றதாலும், அன்பில் நம்பிக்கை கொண்டு, பணிபுரிவதற்கென்றே வாழ்வதாலும், புன்முறுவல் பூக்கும் கிறிஸ்தவர்கள் நமக்குத் தேவை" என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் பதிவு செய்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 October 2018, 15:10