திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

இளையோருக்கும் முதியோருக்கும் இடையே உடன்படிக்கை

பிலிப்பீன்ஸ் நாட்டுக்குச் சென்ற வேளையில் அங்கிருந்த இளையோரும் குழந்தைகளும் தன்னை Lolo Kiko அதாவது, "தாத்தா பிரான்சிஸ்" என்று அழைத்தது மகிழ்வை அளித்தது – திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இன்றைய சமுதாயம் தாத்தா, பாட்டி ஆகியோரின் குரல்களை அடக்கிவிட்டது என்றும், அவர்களது அனுபவம், ஞானம் ஆகியவற்றிற்கு தகுந்த இடம் வழங்கப்படவில்லை என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு புதிய நூலுக்கு எழுதிய அணிந்துரையில் கூறியுள்ளார்.

அக்டோபர் 23, இச்செவ்வாய் மாலை, வெளியிடப்பட்ட "காலத்தின் ஞானத்தைப் பகிர்ந்துகொள்ளுதல்" என்ற நூலுக்கு, திருத்தந்தை வழங்கியுள்ள இந்த அணிந்துரையைக் குறித்து, வத்திக்கான் நாளிதழ் L’Osservatore Romano, "ஒரு புதிய அரவணைப்பு - இளையோருக்கும் முதியோருக்கும் இடையே உடன்படிக்கை" என்ற தலைப்பில் செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.

தான் பிலிப்பீன்ஸ் நாட்டுக்குச் சென்ற வேளையில் அங்கிருந்த இளையோரும் குழந்தைகளும் தன்னை Lolo Kiko அதாவது, "தாத்தா பிரான்சிஸ்" என்று அழைத்தது தனக்கு மிகவும் மகிழ்வை அளித்தது என்று தன் அணிந்துரையின் துவக்கத்தில் குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வுலகில் பெருகிவரும் தூக்கியெறியும் கலாச்சாரத்திற்கு ஒரு நேர்மறையான மாற்றாக, முதியோரை தூக்கியெறிந்துவிடாமல் போற்றி வளர்ப்பது, இளையோரின் கடமை என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் அணிந்துரையில் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

முதியோரை ஒதுக்கிவைப்பது, இளையோரின் தவறு என்று கூறும் திருத்தந்தை, மனக்கசப்பில், முதியோர் பலர், இளையோரை புரிந்துகொள்ளாமல் கண்டனம் செய்வதும் தவறு என்று கூறியுள்ளார்.

முதியோரின் அனுபவம் மற்றும் ஞானம் ஆகியவை, இளையோரின் கனவுகள் மற்றும் ஆர்வம் ஆகியவற்றுடன் இணையும்போது, நல்லதொரு உலகம் உருவாகும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்நூலின் அணிந்துரையில் வலியுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 October 2018, 16:36