தேடுதல்

Vatican News
கிரக்கோவ் உயர் மறைமாவட்டத்திலிருந்து, உரோம் நகருக்கு வருகை தந்துள்ள திருப்பயணிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் கிரக்கோவ் உயர் மறைமாவட்டத்திலிருந்து, உரோம் நகருக்கு வருகை தந்துள்ள திருப்பயணிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

போலந்து நாட்டு திருப்பயணிகளை வாழ்த்தியத் திருத்தந்தை

புனிதத் திருத்தந்தை 2ம் ஜான் பால் என்ற அரிய கருவூலத்தை வடிவமைத்த போலந்து நாட்டுக்கும், குறிப்பாக, கிரக்கோவ் மறைமாவட்டத்திற்கும் திருஅவை நன்றிக்கடன் பட்டிருக்கிறது - திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

1978ம் ஆண்டு, அக்டோபர் 16ம் தேதி, புனிதத் திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் திருஅவையின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட நாளின் 40ம் ஆண்டு நிறைவைக் கொண்டாட, போலந்து நாட்டின் கிரக்கோவ் உயர் மறைமாவட்டத்திலிருந்து, உரோம் நகருக்கு வருகை தந்துள்ள திருப்பயணிகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள். அக்டோபர் 10, இப்புதன் காலை வத்திக்கானில் சந்தித்தார்.

கிரக்கோவ் திருப்பயணிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ்

வத்திக்கானிலுள்ள அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தில், கிரக்கோவ் உயர்மறைமாவட்ட பேராயர் Marek Jedraszweski மற்றும் இம்மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர், கர்தினால் Stanislaw Dziwisz ஆகியோருடன் கூடியிருந்த 700க்கும் அதிகமான திருப்பணிகளை வாழ்த்தியத் திருத்தந்தை, புனிதத் திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் தலைமைப்பணியை ஏற்ற 40ம் ஆண்டு நெருங்கி வருகிறது என்பதை தன் வாழ்த்துரையின் துவக்கத்தில் குறிப்பிட்டார்.

புனிதத் திருத்தந்தை 2ம் ஜான் பால் என்ற கருவூலம்

புனிதத் திருத்தந்தை 2ம் ஜான் பால் என்ற அரிய கருவூலத்தை வடிவமைத்த போலந்து நாட்டுக்கும், குறிப்பாக, கிரக்கோவ் மறைமாவட்டத்திற்கும் திருஅவை நன்றிக்கடன் பட்டிருக்கிறது என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2016ம் ஆண்டு, இளையோர் உலக நாள் நிகழ்வுகளின் வேளையில், அந்த மறைமாவட்டத்தின் விருந்தோம்பலை தான் அனுபவித்ததையும் தன் வாழ்த்துரையில் நினைவுகூர்ந்தார்.

போலந்து நாடு, திருஅவைக்கு வழங்கியுள்ள பல புனிதர்களின் வாழ்வால் தூண்டப்பட்டு, திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களும் தன் வாழ்வை அமைத்துக்கொண்டார் என்றும், தன் வாழ்வில் சந்தித்த பல்வேறு துன்பங்களால் புடமிடப்பட்டு, தன் நம்பிக்கையை உறுதியாக்கிக் கொண்டார் என்றும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.

புனிதத் திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், விண்ணிலிருந்து கத்தோலிக்கத் திருஅவையை வழிநடத்தி வருகிறார், குறிப்பாக, கிரக்கோவ் உயர் மறைமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அனைவருக்காகவும், அவர்கள் குடும்பங்களுக்காகவும் இறைவனிடம் பரிந்து பேசுகிறார் என்று இம்மறைமாவட்ட திருப்பயணிகளிடம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

10 October 2018, 16:21