தேடுதல்

 திருத்தந்தையுடன் Montenegro அரசுத்தலைவர் திருத்தந்தையுடன் Montenegro அரசுத்தலைவர் 

Montenegro குடியரசின் அரசுத்தலைவரைச் சந்தித்த திருத்தந்தை

திருத்தந்தையையும், திருப்பீட உயர் அதிகாரிகளையும் சந்தித்தார், Montenegro குடியரசின் அரசுத்தலைவர், Milo Djukanovic.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

அக்டோபர் 8, இத்திங்கள் காலை, Montenegro குடியரசின் அரசுத்தலைவர், Milo Djukanovic அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பீடத்தில் சந்தித்துப் பேசினார்.

அரசுத்தலைவர் Djukanovic அவர்கள், திருத்தந்தையை தனியே சந்தித்துப் பேசியபின்னர், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்களையும் சந்தித்தார்.

2011ம் ஆண்டு, திருப்பீடத்திற்கும், Montenegro குடியரசுக்கும் இடையே உருவான ஒப்பந்தத்திற்குப் பின்னர், இரு நாடுகளுக்கிடையே நிலவிவரும் நல்லுறவுகள் குறித்தும், கத்தோலிக்கத் திருஅவை, அந்நாட்டில் ஆற்றிவரும் சிறப்புப் பணிகள் குறித்தும் இச்சந்திப்புக்களில் பேசப்பட்டன.

ஐரோப்பாவில் ஒன்றிணைவதற்கு தேவையான பாதை குறித்தும், அந்நாட்டில் இனங்களுக்கிடையிலும், மதங்களுக்கிடையிலும் இணக்க வாழ்வை உருவாக்க மேற்கொள்ளவேண்டிய முயற்சிகள் குறித்தும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும் இந்தச் சந்திப்புக்களில் பேசப்பட்டதென்று திருப்பீடம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், நல்ல சமாரியர் உவமையை மையப்படுத்தி, இத்திங்கள் காலை வழங்கிய மறையுரையின் ஒரு கருத்தை வெளியிடும் விதமாக, திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி அமைந்திருந்தது.

"நாம் ஒவ்வொருவரும் காயம்பட்ட மனிதராக இருக்கிறோம். நம்மை நெருங்கிவந்து, நம்மைப் பேணிய நல்ல சமாரியராக இயேசு விளங்குகிறார்" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றன.

இஞ்ஞாயிறன்று கொண்டாடப்பட்ட செபமாலை அன்னை மரியாவின் திருநாளையொட்டி, திருத்தந்தை வெளியிட்டிருந்த டுவிட்டர் செய்தியில், "செபமாலை அன்னையே, திருஅவைக்காக வேண்டிக்கொள்ளும்" என்ற சொற்கள் பதிவாகியிருந்தன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 October 2018, 16:27