சுலோவாக்கியா திருப்பயணிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் சுலோவாக்கியா திருப்பயணிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் 

சுலோவாக்கியாவின் விசுவாசிகளை பாராட்டிய திருத்தந்தை

கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில், சந்தித்த துன்பங்கள் குறித்து அறிந்துள்ள சுலோவாக்கிய கத்தோலிக்கர்கள், இன்று வேறுவகையான துன்பங்களை விசுவாசத்துடன் சந்திக்க அழைப்புப் பெற்றுள்ளனர் - திருத்தந்தை.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

பல்வேறு வடிவங்கள் மற்றும் பாரம்பரியங்களுடன் இறைவனே தன் திருஅவையை வளப்படுத்தியுள்ளார் என்று, புனித திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் கூறிய வார்த்தைகளுடன், சுலோவாக்கியாவின் கிரேக்க கத்தோலிக்க வழிபாட்டுமுறை விசுவாசிகளை, திருப்பீடத்தில் வரவேற்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.

சுலோவாக்கியாவின் Presov தலைமைப்பீடம் உருவாக்கப்பட்டதன் 200ம் ஆண்டு கொண்டாட்டங்களையொட்டி, தன்னை சந்திக்க வந்திருந்த, 1300க்கும் அதிகமான சுலோவாக்கியா கிரேக்க கத்தோலிக்க வழிபாட்டுமுறை விசுவாசிகளுக்கு திருத்தந்தை வழங்கிய உரையை இவ்வாறு துவக்கினார்.

அமைதி, தாராள மனப்பான்மை எளிமை ஆகிய பண்புகள் கொண்ட நல்ல மேய்ப்பர்களாக நற்செய்தியைப் பறைசாற்றி, பணி பெறுவதற்கல்ல, பணி புரியவே வந்துள்ளோம் என்பதன் எடுத்துக்காட்டுகளாக, சுலோவாக்கிய விசுவாசிகள் திகழவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்தார்.

கடந்த நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில், சுலோவாக்கிய திருஅவை சந்தித்துள்ள துன்பங்கள் குறித்து அறிந்துள்ள கத்தோலிக்கர்கள், இன்று சந்திக்கும் வேறுவகையான துன்பங்களில் விசுவாசத்துடன் செயல்பட அழைப்புப் பெற்றுள்ளனர் என்று கூறினார், திருத்தந்தை.

கிழக்கு ஐரோப்பாவும், மேற்கு ஐரோப்பாவும் தங்கள் கிறிஸ்தவ வேர்களைக் கண்டுபிடிப்பதன் வழியாகவே, மனித மாண்பை அடிப்படையாகக் கொண்ட உறுதியான மரங்கள் வளர உதவமுடியும் என்று திருத்தந்தை தன் வாழ்த்துரையில் மேலும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 October 2018, 16:33