தேடுதல்

புதன் மறைக்கல்வி உரையின்போது திருத்தந்தை பிரான்சிஸ் புதன் மறைக்கல்வி உரையின்போது திருத்தந்தை பிரான்சிஸ் 

வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் விசுவாசமாக செயல்பட அழைப்பு

ஒருவருக்கொருவர் விசுவாசமாக இருப்போம் என திருமண நாளின்போது நாம் எடுத்துக்கொண்ட வாக்குறுதி, தினசரி இதய சுத்திகரிப்பை எதிர்பார்க்கின்றது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இளையோரை மையப்படுத்தி நடைபெற்றுவரும் ஆயர் மாமன்றக் கூட்டங்களில் பெருமளவான நேரங்கள் கலந்துகொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் வழக்கமான சந்திப்புகளையும் தொடர்ந்து வருகிறார். இந்நிலையில், இப்புதன் காலை, புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளை சந்தித்து, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கினார். பத்துக் கட்டளைகள் குறித்த தன் தொடர் மறைக்கல்வி உரைகளில், இப்புதனன்று, 'விபச்சாரம் செய்யாதே' என்ற ஆறாவது கட்டளை குறித்து, தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார், திருத்தந்தை.

அன்பு சகோதர சகோதரிகளே, பத்து கட்டளைகள் குறித்த நம் மறைக்கல்வி தொடரில், இன்று, 'விபச்சாரம் செய்யாதே' என்ற ஆறாவது கட்டளை குறித்து நோக்குவோம். திருமண வாழ்வில் விசுவாசமாக இருக்கவேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டும் இந்த இறைக்கட்டளை, நம் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் நாம் விசுவாசமாக செயல்பட வேண்டியதன் தேவையைப் பற்றியும் பேசுகிறது. விசுவாசமாக இருத்தல் என்பது, சுதந்திரமான, பொறுப்புணர்வுடன் கூடிய உறவின் அடையாளமாக உள்ளது. இந்த உறவு, சுயநலத்தை மறுப்பதுடன், தன்னையே தாராளமாக வழங்குவதையும் குறித்து நிற்கிறது. ஒவ்வொரு இதயமும் அன்புக்காக ஏங்குகிறது. அனைத்து உண்மை அன்பும் இறைவனின் முடிவற்ற அன்பின் பிரதிபலிப்பாக உள்ளது. மற்றவர்களுடன் கொள்ளும் உறவில் நேர்மையாகவும் ஒருமைப்பாட்டுடனும் நடப்பதிலிருந்தும்,  நம் உணர்ச்சிகளை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதிலிருந்தும், பிறக்கும் சுய அறிவில் நாம் மேலும் வளரவேண்டும் என்பதை, அன்பிற்கு விடப்படும் அழைப்பு நம்மிடம் எதிர்பார்க்கிறது. திருஅவை மீது கிறிஸ்து கொண்டுள்ள முடிவற்ற அன்பில், சிறப்பான விதத்தில் பங்குபெறும் திருமண அன்பிற்குரிய அழைப்பிலும் இது உண்மையாகிறது. ஒருவருக்கொருவர் விசுவாசமாக இருப்போம் என்று, திருமண நாளின்போது எடுத்துக்கொள்ளப்படும் வாக்குறுதி, இதயங்களில் உருவாகக்கூடிய உண்மையற்ற, விசுவாசமற்ற நிலைகளை ஒவ்வொரு நாளும் களைந்தெறிந்து, ஒருவர் ஒருவருடனும், இறைவனுடனும், ஒன்றிப்பிலும், விசுவாசத்திலும், வளர்வதற்குரிய அர்ப்பணத்தை வெளிப்படுத்தி நிற்கிறது.

பத்துக் கட்டளைகளுள் ஆறாவது கட்டளையாகிய 'விபச்சாரம் செய்யாதே' என்பது குறித்து, இவ்வாறு, தன் மறைக்கல்வி சிந்த்னைகளைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 October 2018, 11:58