தேடுதல்

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வியுரை திருத்தந்தையின் புதன் மறைக்கல்வியுரை 

மறைக்கல்வியுரை: உண்மை அன்பு என்பது, முழுமையாக தருவதை குறிக்கிறது

கணவன் மனைவிக்கு இடையே நிலவும் அன்பு, எப்போதும் உண்மையானதாகவும், தன்னையே வழங்குவதாகவும், தன்னையே தியாகம் செய்வதாகவும் இருக்கவேண்டும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய மூன்று நாட்கள், உரோம் நகரம் உட்பட, இத்தாலி முழுவதும் மழை பெய்துகொண்டிருக்க, புதன் மட்டும் மழையின்றி, சூரிய ஒளியுடன் திகழும் என வானிலை ஆய்வாளர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், திருத்தந்தையின் புதன் மறைக்கல்விக்கான ஏற்பாடுகள், புனித பேதுரு வளாகத்திலேயே செய்யப்பட்டிருந்தன. பத்துக் கட்டளைகள் குறித்த தன் தொடர் மறைக்கல்வி உரைகளில், கடந்த வாரம் புதனன்று, 'விபச்சாரம் செய்யாதே', அதாவது, 'மோக பாவம் செய்யாதே'  என்ற ஆறாவது கட்டளை குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரமும், அந்த கட்டளை குறித்த சிந்தனைகளைத் தொடர்ந்தார்.

அன்பு சகோதர சகோதரிகளே, பத்து கட்டளைகள் குறித்த மறைக்கல்வி தொடரில், இன்று, 'விபச்சாரம் செய்யாதே' என்ற ஆறாவது கட்டளை குறித்து நம் சிந்தனைகளைத் தொடர்வோம்.  திருமண வாழ்வில் விசுவாசமாக இருக்கவேண்டும் என்பதை சுட்டிக்காட்டும் இந்த இறைக் கட்டளை, நம் வாழ்வின் ஒவ்வொரு உறவிலும், அழைப்பிலும் நாம் விசுவாசமாக செயல்பட வேண்டியதன் தேவை பற்றியும் பேசுகிறது. அனைத்துவிதமான அன்பும் தூய்மையானதாக, விசுவாசமுள்ளதாக, தாரளமனதுடன் கூடியதாக, பலன் தருவதாக இருக்க வேண்டும் என்பதை, இயேசுவின் ஒளியுடன் நோக்கும்போது நாம் கண்டுகொள்கிறோம். உண்மை அன்பு என்பது, நம்மையே நாம் முழுமையாக வழங்குவதற்கு, நம்மைத் தூண்டுகிறது. ஆகவே, கணவன் மனைவிக்கு இடையே நிலவும் அன்பு, எப்போதும், உண்மையானதாகவும், தன்னையே வழங்குவதாகவும், தன்னையே தியாகம் செய்வதாகவும் உள்ளது. திருமண வாழ்வில் ஒருவருக்கொருவர் விசுவாசமாக இருப்பதன் அடிப்படையாக இருக்கும் இயேசு கிறிஸ்துவின் முடிவற்ற அன்பு, தம்பதியர், ஒருவர் ஒருவர் மீது காட்டும் அன்பிலும், பெற்றோர் என்ற நிலையில் அவர்கள் கொண்டிருக்கும் ஆன்மீகத்திலும் பிரதிபலிக்கிறது. பெற்றோர் கொண்டிருக்கும் ஆன்மீக உணர்வு நிலையே, குருத்துவ தேவ அழைத்தலுக்கும், அர்ப்பண கன்னிமை நிலைக்கும் ஊக்கம் தருகிறது. இயேசு கிறிஸ்து, மற்றும், அவரது அன்பின் மறையுண்மையில், நாம், மனித பாலியல் உறவு என்ற கொடையின் முழு அர்த்தம் குறித்தும், திருமண ஒப்பந்தம் எதிர்பார்க்கும் விசுவாச நிலை குறித்தும் புரிந்துகொள்கிறோம். சிற்றின்ப வேட்கைகளையும், கட்டுப்பாடற்ற பாலியல் உறவுகளையும் புறம்தள்ளி, உண்மை அன்பில் ஆணாகவும், பெண்ணாகவும், உடலாகவும், ஆவியாகவும் செயல்பட நாம் அழைப்புப் பெற்றுள்ளோம். 'விபச்சாரம் செய்யாதே' என்ற இந்தக் கட்டளை, இயேசுவில் வெளிப்படுத்தப்பட்ட அப்பழுக்கற்ற, விசுவாசம் நிரம்பிய ‘தம்பதியர் அன்பில்’ முழுவதுமாக வாழ, இறைவனால் விடப்பட்ட அழைப்பாகும்.

இவ்வாறு, 'விபச்சாரம் செய்யாதே' என்ற ஆறாவது கட்டளையைக் குறித்து இவ்வாரமும் தன் சிந்தனைகளைத் தொடர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 October 2018, 11:21