இத்தாலியின் பொலோஞ்ஞா நகரில் அமைதியின் பாலங்கள் கருத்தரங்கு இத்தாலியின் பொலோஞ்ஞா நகரில் அமைதியின் பாலங்கள் கருத்தரங்கு 

உலகின் அமைதிக்கான ஏக்கத்தை மதங்கள் புறக்கணிக்க முடியாது

மதங்களின் வேறுபாடுகளிலும், அவர்களை ஒன்றிணைக்கும் அம்சமாக, மக்கள் பணி உள்ளது, என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

உலக அமைதிக்கென மதங்கள் ஒன்றிணைந்து மேற்கொள்ளும் வழிபாடு, 32 ஆண்டுகளுக்கு முன்னர் துவக்கப்பட்டு, இன்றும் தொடர்ந்து கொண்டிருப்பது, மதங்களின் ஒன்றிணைந்த முயற்சியின் வெளிப்பாடாக உள்ளது என எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலியின் பொலோஞ்ஞா உயர் மறைமாவாட்டமும் சான் எஜிதியோ குழுவும் இணைந்து பொலோஞ்ஞா நகரில், உலகின் பல்வேறு மதங்களை அழைத்து, இஞ்ஞாயிறு முதல் செவ்வாய்க்கிழமை முடிய, நடத்தும் மூன்று நாள் கூட்டத்தில் கலந்து கொள்ளும் பல்வேறு மதங்களின் பிரதிநிதிகளுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.

அமைதியின் பாலங்கள் என்று தெரிவு செய்யப்பட்டுள்ள இக்கூட்டத்தின் தலைப்பு, உண்மையான கருத்துப் பகிர்வுகளையும், ஒன்றிப்பின் சங்கிலிகளையும், மோதல்களையும் பகையையும் வெற்றி கொள்ளும் பாதைகளையும் கண்டுகொள்ள அழைப்பு விடுப்பதாக உள்ளது என கூறியுள்ளார்.

நமக்குள் உருவாகும் அமைதியில் மட்டும் நிறைவைக் கண்டுகொண்டு, இவ்வுலகில் நிலவும் துன்ப நிலைகள் மற்றும் போர்ச் சூழல்கள் குறித்து நாம் அக்கறையின்றி இருக்க முடியாது என இச்செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மதங்களிடையே காணப்படும் வேறுபாடுகள், அவர்களை, ஒருவருக்கொருவர் எதிராக அமைப்பதற்கு அல்ல, மாறாக, அமைதியின் வழிகளைக் கண்டுகொள்ளும் நோக்கத்தில், ஒன்றிணைந்து உழைப்பதற்கு உதவுவதாக இருக்கவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

மத நம்பிக்கையுடையவர்கள் ஒவ்வொருவரும், அமைதியின் கலைஞர்களாக, அமைதிப் பாதையை ஊக்குவிப்பவர்களாக, பாலங்களை கட்டியெழுப்புபவர்களாக, ஏழைகள் சார்பில் ஒன்றிணைந்து உழைப்ப்பவர்களாக, இளையோரின் குரல்களுக்கு செவிமடுப்பவர்களாக இருக்கவேண்டும் என்ற விண்ணப்பத்தையும், தன் செய்தியில் முன்வைத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 October 2018, 16:03