திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் அருள்பணி Marco Pozza திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் அருள்பணி Marco Pozza  

"மரியாவே வாழ்க" – திருத்தந்தையின் கலந்துரையாடல் நூலாக...

அன்னை மரியாவைக் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்ட ஒரு கலந்துரையாடலின் பயனாக, வெளிவரும் நூல் - "மரியாவே வாழ்க"

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

அன்னை மரியாவை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கும், TV2000 தொலைக்காட்சியில், நிகழ்ச்சிகளை வழங்கும் அருள்பணி Marco Pozza அவர்களுக்கும் இடையே நிகழ்ந்த கலந்துரையாடலைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஒரு நூலின் முக்கியப் பகுதிகள், இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டுள்ளன.

"மரியாவே வாழ்க" (Ave Maria) என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்நூலில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்னை மரியாவின் பல்வேறு உன்னத குணங்களை விளக்குகிறார் என்று கூறப்பட்டுள்ளது.

அன்னை மரியா, மிகக்குறைந்த சொற்களைப் பேசுபவராகவும், தன் மகனின் வாழ்வையும், பணியையும் பாதுகாப்பதில் ஆர்வமுள்ளவராகவும், முதல் கிறிஸ்தவ சமுதாயத்தின் பாதுகாவலராகவும் விளங்குகிறார் என்று திருத்தந்தை எடுத்துரைத்துள்ளார்.

நம்பிக்கையை விதைப்பவராகவும், தன் குழந்தைகள் இதயங்களில் சுமக்கும் சிலுவைகளை உடன் சுமப்பவராகவும் அன்னை மரியா விளங்குகிறார் என்பதற்கு, அவரது திருத்தலங்களும், அங்கு கூடிவரும் பக்தர்களும் சான்றுகள் என்று திருத்தந்தை இந்நூலில் கூறியுள்ளார்.

அன்னையற்ற ஒரு சமுதாயம், இதயமற்றதாக, குடும்ப சுவையற்றதாக, கருணையற்றதாக மாறிவிடும் என்று, இந்நூலில் மேற்கொண்ட உரையாடலில் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மிகக் கடினமானச் சூழலிலும், தன் குழந்தைக்காக உயிரையும் தியாகம் செய்து காப்பாற்றும் அன்னையர் உள்ளனர் என்றும், அன்னை இருக்குமிடம், எப்போதும், ஒற்றுமையின் இடமாக அமையும் என்பதையும் திருத்தந்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

பாவிகளாகிய நம் அனைவருக்கும் அன்னை மரியா ஒரு பாசமுள்ள தாய் என்று கூறும் திருத்தந்தை, தன் குடும்பத்தில், தன்னுடைய அன்னை எவ்வாறு ஐந்து குழந்தைகளையும் வளர்த்தார் என்பது குறித்தும் இந்நூலில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

அன்னை மரியா நமக்கு எப்போதும் செவிமடுக்கிறார், ஏனெனில், செவிமடுத்தலுக்கும், நம்பிக்கைக்கும் நெருங்கியது தொடர்பு உள்ளது என்று, "மரியாவே வாழ்க" நூலில் பதிவு செய்யப்பட்டுள்ள உரையாடலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 October 2018, 16:55