உரோம் நகரின் ஒரு பக்க, மாலை தோற்றம் உரோம் நகரின் ஒரு பக்க, மாலை தோற்றம்  

வறுமை ஒழிப்பு உலக நாளன்று, 'திருத்தந்தையின் இல்லங்கள்'

அக்டோபர் 17, வறுமை ஒழிப்பு உலக நாளன்று, 18 குடியிருப்புக்கள் வறியோருக்காக வழங்கப்பட்டுள்ளன - மிலான் காரித்தாஸ் அமைப்பு

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அக்டோபர் 17, இப்புதனன்று, வறுமை ஒழிப்பு உலக நாள் கடைபிடிக்கப்பட்டதையொட்டி, இத்தாலியின் மிலான் உயர் மறைமாவட்டத்தில் செயல்பட்டு வரும் 'திருத்தந்தையின் இல்லங்கள்' என்ற முயற்சியின் வழியே, 18 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டன.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2017ம் ஆண்டு, மிலான் நகருக்கு மேய்ப்புப்பணி பயணம் மேற்கொண்ட வேளையில், மிலான் காரித்தாஸ் அமைப்பும், புனித கார்லோ அறக்கட்டளையும் இணைந்து, வறியோருக்கென இல்லங்களைக் கட்டி, அவ்வில்லங்களை, திருத்தந்தை, வறியோருக்கு வழங்கும் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தன.

திருத்தந்தை மிலான் நகருக்கு சென்ற வேளையில், 55 குடியிருப்புகள் வழங்கப்பட்ட நிலையில், தற்போது, இம்முயற்சியின் இரண்டாம் நிலையாக, அக்டோபர் 17, வறுமை ஒழிப்பு உலக நாளன்று, மேலும் 18 குடியிருப்புக்கள் வறியோருக்காக வழங்கப்பட்டுள்ளன என்று மிலான் காரித்தாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

வறுமைப்பட்ட புலம்பெயர்ந்த பெற்றோருக்கு, 1917ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் பிறந்த Joseph Wresinski அவர்கள், 1946ம் ஆண்டு அருள் பணியாளராக தன் பணிகளைத் துவக்கினார்.

1956ம் ஆண்டு முதல், வறுமைப்பட்டவர்கள் நடுவே பணியாற்றிவந்த அருள்பணி Wresinski அவர்கள், 1987ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதியை, உலக வறுமை ஒழிப்பு நாளென உருவாக்கினார்.

அவரது நினைவாக, ஐ.நா. அவை, 1993ம் ஆண்டு முதல் அக்டோபர் 17ம் தேதியை வறுமை ஒழிப்பு உலக நாளாக சிறப்பித்து வருகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 October 2018, 16:38