எல் சால்வதோர் திருப்பயணிகளை புனித 6ம் பவுல் அரங்கத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் எல் சால்வதோர் திருப்பயணிகளை புனித 6ம் பவுல் அரங்கத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் 

மறை சாட்சியம் வழியாக இறைச் செய்திக்கு சாட்சி பகர்தல்

அளவற்ற இறைஇரக்கத்திற்கும் முடிவற்ற மனித துன்பங்களுக்கும் இடையே அருள்பணியாளர் நிற்கின்றார், என்பதை உணர்ந்தவர் புனித ரொமேரோ. உரோம் நகரில், புதிய புனிதர் ஆஸ்கார் ரொமேரோ அவர்களின் உருவச்சிலை திறப்பு.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மனிதனுக்கான இறைவனின் செய்திக்கு சாட்சி பகர்வதே மறைசாட்சியமாகும் என்பதால், ஒவ்வொரு மனிதரும் மறைசாட்சியாக மாற தயாராக இருக்கவேண்டும் எனபதை வலியுறுத்தியவர், ஆயர் ஆஸ்கர் ரொமேரோ என்று, எல் சல்வதோர் நாட்டிலிருந்து வந்திருந்த திருப்பயணிகளிடம், அக்டோபர் 15, இத்திங்கள் காலை கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அளவற்ற இறைஇரக்கத்திற்கும் முடிவற்ற மனித துன்பங்களுக்கும் இடையே அருள்பணியாளர் நிற்கின்றார், என்பதை உணர்ந்தவர் புனித ரொமேரோ என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் ஆடுகளுக்காக வாழ்வையே வழங்கும் ஆயனாக வாழ்ந்து காட்டியவர் அவர் என்றுரைத்தார்.

நம் வாழ்வில் குடியிருக்க விரும்பும் இறைவன், விடுதலையின் செய்தியை மனித குலமனைத்திற்கும் எடுத்துரைக்க ஆவல் கொள்கிறார் எனவும், பேராயர் ஆஸ்கர் ரொமேரோவின் புனிதர் பட்ட நிகழ்வில் கலந்துகொள்ள எல் சல்வதோரிலிருந்து வந்திருந்த திருப்பயணிகளை, புனித 6ம் பவுல் அரங்கத்தில் சந்தித்தபோது எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் பாவத்திலிருந்தும், தீய எண்ணங்களிலிருந்தும், பகைமை உணர்வுகளிலிருந்தும், விடுதலை பெறுவதற்கு செபத்தின் உதவி தேவை என்றார்.

எல் சல்வதோர் நாட்டின் அண்மை வரலாற்றில் மக்கள் அனுபவித்துள்ள துன்பங்கள், பிரிவினைகள், வன்முறைகள் மற்றும் போர் குறித்தும், அதனால் மக்கள் தங்கள் உறைவிடங்களை விட்டு வெளியேறும் நிலைக்கு கட்டாயப்படுத்தப்பட்டது குறித்தும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இலத்தீன் அமெரிக்க மக்கள் அனைவருக்கும் தன் அமைதி மற்றும் ஒப்புரவின் செய்தியை இத்திருப்பயணிகள் வழியாக அனுப்ப விரும்புவதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையே, உரோம் நகரின் EUR பகுதியில், புதிய புனிதர் ஆஸ்கர் ரொமேரோ அவர்களின் உருவச்சிலை ஒன்று சல்வதோர் அரசுத் தலைவர், மற்றும், உரோம் நகர் மேயர் ஆகியோர் முன்னிலையில், சனிக்கிழமையன்று திறந்து வைக்கப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 October 2018, 16:14