தேடுதல்

புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் நடைபெறும் புனிதர் பட்டமளிப்பு விழா திருப்பலி புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் நடைபெறும் புனிதர் பட்டமளிப்பு விழா திருப்பலி 

புனிதத் திருத்தந்தை 6ம் பவுல் பயன்படுத்திய திருக்கிண்ணம்

புனித பேராயர் ஆஸ்கர் ரொமேரோ கொல்லப்பட்டபோது அணிந்திருந்த திருப்பலி அங்கியைச் சுற்றி கட்டியிருந்த கயிறை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனிதர் பட்ட திருப்பலியில் பயன்படுத்தினார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

அக்டோபர் 14 இஞ்ஞாயிறு, புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில், உலகின் பல நாடுகளிலிருந்து வந்திருந்த 70,000த்திற்கும் அதிகமான விசுவாசிகள், மற்றும் ஸ்பெயின் நாட்டு அரசி, இத்தாலிய அரசுத்தலைவர் ஆகியோர் உட்பட, பல்வேறு உலகத்தலைவர்கள் கூடியிருக்க, ஏழு அருளாளர்களை புனிதர்களாக உயர்த்தும் திருப்பலி, காலை 10.15 மணிக்குத் துவங்கியது.

அருளாளர்களான திருத்தந்தை 6ம் பவுல், பேராயர் ஆஸ்கர் ரொமேரோ, அருள்பணியாளர்களான பிரான்செஸ்க்கோ ஸ்பிநெல்லி, வின்சென்சோ ரொமானோ, அருள் சகோதரிகளான மரிய கத்தரீனா காஸ்பெர், நசாரியா இஞ்ஞாசியா, மற்றும் 19 வயதான இளையவர், நுன்சியோ சுல்பிரிசியோ ஆகிய எழுவரையும் புனிதர்களாக உயர்த்தும் திருப்பலியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.

புனிதர் பட்டம் வழங்கப்படும் திருச்சடங்கு

இத்திருப்பலியின் துவக்கத்தில், தூய ஆவியாரின் வருகைக்காக எழுப்பப்படும் 'Veni Creator Spiritus' என்ற பாரம்பரியப் பாடல் பாடப்பட்ட பின், புனிதர் பட்ட வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் திருப்பீட பேராயத்தின் தலைவர், கர்தினால் ஜியோவான்னி அஞ்செலோ பெச்சு அவர்கள், கத்தோலிக்கத் திருஅவையின் சார்பில், ஏழு அருளாளர்களை புனிதர்களாக உயரத்தும்படி, திருத்தந்தையிடம் விண்ணப்பித்த வேளையில், இவ்வேழு அருளாளர்களின் வாழ்க்கைக் குறிப்புக்களை சுருக்கமாகக் கூறினார்.

இந்த விண்ணப்பத்தைத் தொடர்ந்து, அனைத்துப் புனிதர்களின் பிரார்த்தனை பாடப்பட்டபின், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவன், அன்னை மரியா, புனிதர்கள் பேதுரு மற்றும் பவுல், மற்றும் அனைத்துப் புனிதர்கள் சாட்சியாக, இந்த ஏழு அருளாளர்களை, புனிதர்கள் என அறிவித்தார்.

ஏழு புனிதர்களின் புனிதப் பொருள்கள்

இந்த அறிவிப்பை, புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த அனைவரும் கரவொலி எழுப்பி ஆரவாரமாக வரவேற்றதைத் தொடந்து, உன்னதங்களிலே என்ற பாடலுடன் இந்த ஞாயிறு திருப்பலி தொடர்ந்தது.

இந்தத் திருப்பலியின்போது, பீடத்திற்கு அருகே வைக்கப்பட்டிருந்த அன்னை மரியாவின் திரு உருவத்திற்கு முன், ஏழு புனிதர்களின் புனிதப் பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன.

புனிதர்களான திருத்தந்தை 6ம் பவுல், பேராயர் ரொமேரோ நினைவாக...

மேலும், இத்திருப்பலிக்கென, பயன்படுத்தப்பட்ட திருக்கிண்ணம் புனிதத் திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் விரும்பி பயன்படுத்திய திருக்கிண்ணம் என்பதும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் கரத்தில் பிடித்திருந்த கோல், புனிதத் திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் பயன்படுத்திய கோல் என்பதும் குறிப்பிடத்தக்கன.

அதேவண்ணம், பேராயர் ஆஸ்கர் ரொமேரோ அவர்கள், 1980ம் ஆண்டு, மார்ச் 24ம் தேதி, திருப்பலி நிறைவேற்றிய வேளையில் கொல்லப்பட்டபோது, அவர் பயன்படுத்திய திருப்பலி அங்கியைச் சுற்றி கட்டியிருந்த கயிறை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு திருப்பலியில் பயன்படுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புனித பட்ட சிறப்பு திருப்பலியை நிறைவு செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பலியின் இறுதியில், மூவேளை செப உரை வழங்கிய வேளையில், புனிதர் பட்ட திருச்சடங்கில் பங்கேற்க வந்திருந்த அனைவருக்கும் தன் நன்றியைக் கூறினார்.

குறிப்பாக, ஸ்பெயின் நாட்டு அரசி, மற்றும், இத்தாலி, சிலே, எல் சால்வதோர் மற்றும் பானமா நாடுகளின் அரசுத்தலைவர்கள், கான்டர்பரி பேராயர் ரோவன் வில்லியம்ஸ், ஆகியோருக்கு தன் நன்றியையும், வாழ்த்துக்களையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெரிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 October 2018, 13:10