‘நலவாழ்வு மேலாண்மையில் நன்னெறி’ கருத்தரங்கின் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் ‘நலவாழ்வு மேலாண்மையில் நன்னெறி’ கருத்தரங்கின் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் 

நலவாழ்வு மேலாண்மையில் விளங்கும் புதுமை, அக்கறை, நம்பிக்கை

புதுமை, அக்கறை, நம்பிக்கை என்ற மூன்று கருத்துக்களுடன் நலவாழ்வுத் துறை செயலாற்றவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

உலகெங்கும், குறிப்பாக, இலத்தீன் அமெரிக்க நாடுகளில், நலவாழ்வு மேலாண்மை, பொருளாதார சிக்கல்களில் சீர்குலைந்து வருவதைக் காண முடிகிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன்னைச் சந்திக்க வந்திருந்த ஒரு கருத்தரங்கின் பிரதிநிதிகளிடம் கூறினார்.

‘நலவாழ்வு மேலாண்மையில் நன்னெறி’ என்ற கருத்தில், உரோம் நகரில் நடைபெறும் நான்காவது கருத்தரங்கில் கலந்துகொள்ளும் 70 உறுப்பினர்களை, அக்டோபர் 1, இத்திங்கள் காலையில், திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, புதுமை, அக்கறை, நம்பிக்கை என்ற மூன்று கருத்துக்களுடன் நலவாழ்வுத் துறை செயலாற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

செய்ய இயலாத ஒன்றை செய்வது மட்டும் புதுமை அல்ல, மாறாக, நோயுற்று, உதவிகள் ஏதுமின்றி வாடுவோரில் நம் உடன் பிறந்தோரைக் காண்பதும் புதுமை என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உதவிகள் பெறுவோரை உயர்ந்த மாண்புடன் நடத்துவது, நலவாழ்வுத் துறையில் காணவேண்டிய ஒரு முக்கிய அம்சம் என்று கூறினார்.

மருத்துவத் துறையில் காட்டப்படும் அக்கறை, வெறும் மருந்துகளை உரிய நேரத்தில் வழங்குவதில் மட்டும் அமைந்துவிடுவதில்லை, மாறாக, நோயுற்றோர் மீது உண்மையான பரிவுகொண்டு செயல்படுவதிலேயே நம் அக்கறை வெளிப்படுகிறது என்று திருத்தந்தை கூறினார்.

குணமாக்கமுடியாத நோய்களால் பீடிக்கப்பட்டிருப்போர் மீது காட்டப்படும் அக்கறை குறைந்து வருவதும், கருணைக்கொலைகள் அதிகரித்து வருவதும், அக்கறை என்ற பண்பு இவ்வுலகில் குறைந்து வருவதற்கு ஓர் எடுத்துக்காட்டு என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கவலையுடன் தெரிவித்தார்.

நலவாழ்வுத் துறையில் விளங்கவேண்டிய நம்பிக்கை, முதலில், நோயுற்றோர் ஒவ்வொருவரும் தங்களுக்குள் பெறவேண்டிய நம்பிக்கையில் ஆரம்பமாகிறது என்று சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, நலவாழ்வுத் துறையின் அனைத்து அம்சங்களிலும், நோயுற்றோர், நம்பிக்கை கொள்ளும்வண்ணம் நலவாழ்வு மேலாண்மை பணியாற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நலமிழந்திருப்போரிடத்திலும், அவர்களைச் சார்ந்தோரிடத்திலும் நம்பிக்கையை வளர்ப்பதன் வழியே, அவர்கள் வாழ்வில் மகிழ்வைக் கொணர்வது, மருத்துவத் துறையின் முக்கிய குறிக்கோளாக இருக்கவேண்டும் என்று திருத்தந்தை தன் உரையில் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 October 2018, 16:14