தேடுதல்

Passionist துறவு சபையினரை திருத்தந்தை சந்தித்தபோது Passionist துறவு சபையினரை திருத்தந்தை சந்தித்தபோது 

இயேசுவின் பாடுகளை இதயத்தில் கொண்டு இளையோர் வளர‌

மக்களுடன் பணியாற்றும் அருள்பணியாளர், பரிவுடன் பேசுபவராகவும், கண்டனமின்றி செவிமடுப்பவராகவும், கருணையுடன் வரவேற்பவராகவும் இருக்க வேண்டும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

பரிவுடன் பேசுதல், கண்டனம் செய்யாமல் செவிமடுத்தல், கருணையுடன் வரவேற்றல் என்ற குணங்களைக் கொண்ட அருள்பணியாளர்கள் இன்றையத் திருஅவைக்குத் தேவைப்படுகிறார்கள் என இத்திங்களன்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Passionist துறவு சபையின் பொது அமர்வில் கலந்துகொண்ட ஏறத்தாழ 100 அங்கத்தினர்களை இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அச்சபையினர் மேற்கொள்வதற்கென பரிந்துரைக்கப்பட்டிருக்கும் புதிய பாதை குறித்து தன் பாராட்டுக்களை வெளியிட்டார்.

இளைய தலைமுறைக்கு நெருக்கமாக இருக்கும் வகையில் திட்டங்களை தீட்டியுள்ளது குறித்தும், தினசரி வாழ்வின் அனுபவங்கள் வழியாக துறவு சமூகத்திற்கு பயிற்சி வழங்குவது குறித்தும் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'மறைப்பணியை புதுப்பித்தல்: நன்றியுணர்வு, இறைவாக்குரைத்தல், நம்பிக்கை' என்று, இப்பொது அவைக் கூட்டத்திற்கு எடுக்கப்பட்ட தலைப்பு பொருத்தமானது என்று கூறினார்.

'இயேசுவின் பாடுகள் உங்கள் இதயங்களில் என்றும் இருக்கட்டும்' என, இச்சபையைத் தோற்றுவித்த சிலுவையின் புனித பவுல் எடுத்தியம்பிய வார்த்தைகளையும் மேற்கோள்காட்டி உரையாற்றிய திருத்தந்தை, இன்றைய காலத்தில் தூய ஆவியாரின் செயல்பாடுகளையும், இருப்பையும் உணர்ந்தவர்களாக, காலத்தின் அறிகுறிகளை கண்டுகொள்ள முயல்வோம் என்ற அழைப்பையும் முன்வைத்தார்.

கடவுளைத் தேடிக்கொண்டேயிருக்கும் இன்றையை இளைய சமுதாயத்திற்கு, இயேசுவின் பாடுகள், இறைவன் அவர்களை தனிப்பட்ட விதத்தில் இறுதி வரை அன்புகூர்கிறார் என்பதை கற்றுக் கொடுத்து, ஊக்கம் மற்றும் நம்பிக்கையின் ஆதாரமாக இருக்கமுடியும் என Passionist துறவு சபையினரிடம் மேலும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 October 2018, 16:30