தேடுதல்

போஸே துறவு மடத்தை நிறுவிய சகோதரர் என்ஸோ பியாங்கி திருத்தந்தையைச் சந்தித்தபோது... போஸே துறவு மடத்தை நிறுவிய சகோதரர் என்ஸோ பியாங்கி திருத்தந்தையைச் சந்தித்தபோது... 

கிறிஸ்தவ ஒன்றிப்பு கருத்தரங்கிற்கு திருத்தந்தை அனுப்பிய தந்தி

'தேர்ந்து தெளிதலும் கிறிஸ்தவ வாழ்வும்' என்ற தலைப்பில் நடைபெறும் கிறிஸ்தவ ஒன்றிப்பு கருத்தரங்கில் கலந்துகொள்வோருக்கு திருத்தந்தையின் வாழ்த்துக்கள் அடங்கிய தந்திச்செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இறைவனின் திருவுளத்தைப் புரிந்துகொள்வதற்கு காலமும், பொறுமையும் தேவைப்படும் என்பதால், அந்தப் பொறுமையை, ஆர்த்தடாக்ஸ் ஆன்மீகக் கருத்தரங்கில் கலந்துகொள்வோருக்கு இறைவன் வழங்கவேண்டும் என்று தான் செபிப்பதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் வாழ்த்துத் தந்தி ஒன்றில் கூறியுள்ளார்.

செப்டம்பர் 5, இப்புதன் முதல், 8, வருகிற சனிக்கிழமை முடிய, இத்தாலியின் மஞானோ (Magnano) எனுமிடத்தில் அமைந்துள்ள, போஸே துறவு மடத்தில், ஆர்த்தடாக்ஸ் ஆன்மீகத்தை மையப்படுத்தி நடைபெறும் 26வது கிறிஸ்தவ ஒன்றிப்பு கருத்தரங்கிற்கு, திருத்தந்தை அனுப்பியுள்ள வாழ்த்துத் தந்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.

'தேர்ந்து தெளிதலும் கிறிஸ்தவ வாழ்வும்' என்ற தலைப்பில் நடைபெறும் இக்கருத்தரங்கில் இடம்பெறும் கலந்துரையாடல்கள் வழியே, தனிப்பட்ட வாழ்விலும், குழும வாழ்விலும், தேர்ந்து தெளிதல் எவ்வாறு இடம்பெற வேண்டும் என்ற தெளிவு, கருத்தரங்கில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் கிடைக்கவேண்டுமென்று திருத்தந்தை இத்தந்தியில் கூறியுள்ளார்.

இக்கருத்தரங்கு நடைபெறும் போஸே துறவு மடத்தை நிறுவிய சகோதரர் என்ஸோ பியாங்கி (Enzo Bianchi) அவர்களுக்கு, திருத்தந்தையின் பெயரால், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் இத்தந்தியை அனுப்பியுள்ளார்.

1965ம் ஆண்டு, டிசம்பர் 8ம் தேதி, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் நிறைவுற்ற நாளன்று, பொதுநிலையினரான என்ஸோ பியாங்கி அவர்கள், போஸே துறவு மடத்தை நிறுவினார்.

கத்தோலிக்கத் திருஅவை, கிறிஸ்தவ சபைகள் மற்றும் ஆர்த்தடாக்ஸ் சபைகளைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்டோர், போஸே துறவு மடத்தில் வாழ்கின்றனர் என்பதும், ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்கள், இந்த மடத்திற்கு திருப்பயணிகளாக வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 September 2018, 15:14