தேடுதல்

Vatican News
உலக ஆயர்கள் மாமன்ற முன்னேற்பாடு கூட்டத்தில் கலந்துகொண்ட இளையோருடன் திருத்தந்தை பிரான்சிஸ் உலக ஆயர்கள் மாமன்ற முன்னேற்பாடு கூட்டத்தில் கலந்துகொண்ட இளையோருடன் திருத்தந்தை பிரான்சிஸ்  (ANSA)

திருத்தந்தை, மாமன்ற ஆயர்கள், இளையோருடன் சந்திப்பு

இளையோரின் எண்ணங்களுக்கு செவிமடுக்கும் மற்றொரு முயற்சியாக, அக்டோபர் 6ம் தேதி, மாலை 5 மணியளவில், திருத்தந்தையும், மாமன்ற ஆயர்களும், இளையோரைச் சந்திக்கின்றனர்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இளையோரை மையப்படுத்தி, அக்டோபர் மாதம் வத்திக்கானில் நடைபெறும் உலக ஆயர்கள் மாமன்றத்தின் ஒரு முக்கிய நிகழ்வாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், மாமன்றத்தில் கலந்துகொள்ளும் ஆயர்களும், அக்டோபர் 6ம் தேதி, சனிக்கிழமை, இளையோரை சந்திக்கின்றனர் என்று, மாமன்ற ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

இளையோர், விசுவாசம் மற்றும் அழைத்தலை தெளிந்து தேர்தல் என்ற தலைப்பில், வருகிற அக்டோபர் 3ம் தேதி முதல் 28ம் தேதி வரை வத்திக்கானில் நடைபெறும் 15வது உலக ஆயர்கள் மாமன்றத்தையொட்டி வத்திக்கானுக்கு வருகைதரும் அனைத்து இளையோரும் இச்சந்திப்பில் கலந்துகொள்ள வருமாறு, திருத்தந்தை அழைப்பு விடுத்துள்ளார் என மாமன்ற ஒருங்கிணைப்பாளர்கள், செப்டம்பர் 18 நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறினர்.

இளையோர் சந்திப்பின் மையக்கருத்து

"தனித்துவமிக்க, உறுதுணையான, படைப்பாற்றல் கொண்ட நமக்காக" என்ற தலைப்பில் நடைபெறும் இச்சந்திப்பு, அக்டோபர் 6ம் தேதி, மாலை 5 மணியளவில் திருத்தந்தை அருளாளர் ஆறாம் பால் அரங்கத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கத்தோலிக்க கல்வி பேராயம் ஏற்பாடு செய்யும் இச்சந்திப்பில், இளையோரின் சாட்சியங்கள், இசை நிகழ்ச்சி மற்றும் கேள்வி பதில் வடிவில் திருத்தந்தையின் உரை ஆகியவை இடம்பெறும்.

இளையோரை மையப்படுத்தி நடைபெறும் உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு ஒரு முன்னேற்பாடாக, இவ்வாண்டு மார்ச் மாதம் உலகின் பல நாடுகளிலிருந்து வந்திருந்த இளையோரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்தித்து உரையாடியதைத் தொடர்ந்து, இளையோரின் எண்ணங்களுக்கு செவிமடுக்கும் மற்றொரு முயற்சியாக, இவ்விளையோர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

19 September 2018, 14:44