தேடுதல்

உலக ஆயர்கள் மாமன்ற அரங்கம் உலக ஆயர்கள் மாமன்ற அரங்கம் 

'Episcopalis communio' திருத்தூது கொள்கை விளக்கம்

இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் விலைமதிப்பற்ற மரபுரிமைகளில் ஒன்றாக விளங்கும் உலக ஆயர்கள் மாமன்றம், அக்டோபரில் கூடுகிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

'Episcopalis communio' அதாவது ஆயர்களின் ஒருமித்த உறவு என்ற தலைப்பில், உலக ஆயர்கள் மாமன்றத்தின் அமைப்பு முறை பற்றி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள புதிய திருத்தூது கொள்கை விளக்கம், செப்டம்பர் 18, இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டுள்ளது.

வருகிற அக்டோபர் 3ம் தேதி இளையோரை மையப்படுத்தி, 15வது உலக ஆயர்கள் மாமன்றம் தொடங்கவிருக்கும்வேளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செப்டம்பர் 15ம் தேதி கையெழுத்திட்டு வெளியிடப்பட்டுள்ள இப்புதிய திருத்தூது கொள்கை விளக்கம், இறைமக்களின் ஆலோசனைகளைப் பெற்று திருஅவையில் நடைபெறும் ஆயர்கள் மாமன்றம் வழியாக, திருத்தந்தை தனது தலைமைப் பணியை நிறைவேற்றுவதற்கு ஒளியைப் பெறுகிறார் என்று கூறப்பட்டுள்ளது.

1965ம் ஆண்டில் அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களால் உலக ஆயர்கள் மாமன்றம் உருவாக்கப்பட்டதை நினைவுகூரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆயர்கள் மாமன்றம், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் விலைமதிப்பற்ற மரபுரிமைகளில் ஒன்றாக, அகிலத் திருஅவையின் நலனுக்காக அமைக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

அகிலத் திருஅவையின் நன்மைக்காக..

திருஅவையில் எழும்பும் சில முக்கிய கேள்விகளுக்கு, சிறந்த அறிவும், விவேகமும் தேவைப்படும் பதில் சார்ந்தவைகளில், இந்த மாமன்றம், அகிலத் திருஅவையின் நன்மைக்காக, திருத்தந்தையோடு மிகச் சிறந்தமுறையில் ஒத்துழைப்பு வழங்குகிறது என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

புதியவழியில் நற்செய்தி அறிவிக்கப்படவேண்டிய ஒரு புதிய வரலாற்றுச் சூழலில், திருஅவை ஒரு நிரந்தர மறைப்பணியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் இவ்வேளையில், இன்றைய உலகிக்கு நற்செய்தி அறிவிப்பதற்கு, மாபெரும் வாய்க்காலாக உலக ஆயர்கள் மாமன்றம் செயல்பட அழைக்கப்படுகின்றது என்றும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

ஆயர்கள் மாமன்றத்தின் மேலாண்மை குறித்து, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் 2006ம் ஆண்டில் சீரமைப்பு செய்தது குறித்து, குறிப்பாக, ஆயர்கள் மாமன்ற பொது செயலர், ஆயர்களின் சிறப்பு அவை உட்பட, ஆயர்கள் மாமன்ற பொது செயலகத்தின் கடமைகள் உருவாக்கப்பட்டு, படிப்படியாக உறுதிப்படுத்தப்பட்டன என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆயர்கள் மாமன்றத்தில், ஆயர்களாக இல்லாமல், குறிப்பாக, துறவு சபைகள், திருமடச்சார்பற்ற துறவற அமைப்பு கழகங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளின் கருத்துகள் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும் எனவும், இம்மாமன்றத்தில் வாக்குரிமை இல்லாமல் கலந்துகொள்பவர்கள், தங்களின் சிறந்த அறிவுநுட்பத்தால் சிறப்பு செயலருக்கு பெரிதும் உதவுகிறார்கள் எனவும் திருத்தந்தை கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 September 2018, 16:26