புதன் பொது மறைக்கல்வியுரை புதன் பொது மறைக்கல்வியுரை 

கடந்தகால காயங்களைக் குணப்படுத்துங்கள்

சீனாவிலுள்ள கத்தோலிக்க சமூகத்தின் நன்மைக்காகவும், முழு சமுதாயத்தின் நல்லிணக்கத்திற்காகவும் திருப்பீடத்திற்கும், சீன அதிகாரிகளுக்கும் இடையே நல்ஒத்துழைப்பை மென்மேலும் ஊக்குவிக்கும் நோக்கத்தில், நீண்டகாலமாக உரையாடல் இடம்பெற்று வருகிறது

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

சீன மக்கள் எல்லாருக்கும், அமைதி எனும் கொடையை இறைவன் வழங்குமாறு செபிப்போம் என்று, இப்புதன் பொது மறைக்கல்வியுரையில் கலந்துகொண்ட அனைவரையும் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

சீனாவில் ஆயர்கள் நியமனம் குறித்து, சீன மக்கள் குடியரசுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே, செப்டம்பர் 22, சனிக்கிழமையன்று கையெழுத்திடப்பட்டுள்ள ஓர் இடைக்கால ஒப்பந்தம், கடந்தகால காயங்களைக் குணப்படுத்தவும், சீன கத்தோலிக்கரின் முழு ஒன்றிப்பை ஊக்குவிக்கவும் உதவுவதற்குச் செபியுங்கள் என்றும், திருத்தந்தை கூறினார்.

சீனாவிலுள்ள கத்தோலிக்க சமூகத்தின் நன்மைக்காகவும், முழு சமுதாயத்தின் நல்லிணக்கத்திற்காகவும் திருப்பீடத்திற்கும், சீன அதிகாரிகளுக்கும் இடையே நல்ஒத்துழைப்பை மென்மேலும் ஊக்குவிக்கும் நோக்கத்தில், நீண்டகாலமாக இடம்பெற்ற ஆக்கமான உரையாடலின் கனியே இந்த ஒப்பந்தம் என்றும், இந்த ஓர் உணர்வில், சீன கத்தோலிக்கரையும், உலகளாவிய திருஅவையையும் உடன்பிறப்பு உணர்வில் ஊக்குவிப்பதற்கு ஒரு செய்தியை அனுப்பவும் தீர்மானித்தேன் என்றும், திருத்தந்தை கூறினார்.

காயங்களைக் குணப்படுத்தல் மற்றும் முழு ஒன்றிப்பு

இந்த ஒப்பந்தத்தின் வழியாக சீனாவில் ஒரு புதிய படிநிலை திறக்கப்படும் எனவும், இது கடந்தகால காயங்களைக் குணப்படுத்தவும், சீனாவின் அனைத்து கத்தோலிக்கர் மத்தியில் முழு ஒன்றிப்பைக் காக்கவும், புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்புடன் நற்செய்தியை அறிவிக்கவும் உதவும் என்ற தன் நம்பிக்கையைத் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

செபங்கள்

இப்புதன் பொது மறைக்கல்வியில் பங்குகொண்ட எல்லாரிடமும், உங்களுக்கு ஒரு முக்கிய பணி உள்ளது, உறுதியான செபம் மற்றும் உடன்பிறப்பு நட்புணர்வுடன், சீனாவிலுள்ள நம் சகோதரர், சகோதரிகளுடன் தோழமையுடன் நடப்பதற்கு நாம் அழைக்கப்பட்டுள்ளோம், உலகளாவிய திருஅவை, தங்களோடு, தங்களுக்காகச் செபிக்கின்றது என்பதையும், தாங்கள் தனியாக இல்லை என்பதையும் அவர்கள் அறிந்துள்ளார்கள் என்றும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நம்பிக்கையின் அன்னையும், கிறிஸ்தவர்களின் சகாய அன்னையுமான மரியிடம், சீனாவிலுள்ள கத்தோலிக்கரை ஆசிர்வதித்து பாதுகாக்குமாறு செபிப்போம், அனைத்து சீன மக்களுக்கும், இறைவனின் அமைதி எனும் கொடை வழங்கப்படுமாறு செபிப்போம் என்றும் திருத்தந்தை, இப்புதன் பொது மறைக்கல்வியின் இறுதியில் கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 September 2018, 15:32