தேடுதல்

ஐரோப்பா வளாகத்தில் திருத்தந்தை உரை ஐரோப்பா வளாகத்தில் திருத்தந்தை உரை 

புதியவழி நற்செய்திப்பணி வழியாக காயங்கள் குணப்படுத்தப்பட

அருளாளர் Pino Puglisi அவர்கள், மறைசாட்சியாக கொல்லப்பட்டதன் 25ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, இத்தாலியின் பலேர்மோ நகருக்கு, செப்டம்பர் 15, இச்சனிக்கிழமையன்று மேய்ப்புப்பணி பயணம் மேற்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

பல்வேறு கடும் துன்பங்களுக்கு மத்தியில், தலத்திருஅவை, உயிரூட்டத்துடனும்,  இறைவாக்குப்பண்புடனும் பணியாற்றி வருகின்றது என்று, இத்தாலியின் சிசிலி பகுதி கத்தோலிக்கரை இச்சனிக்கிழமையன்று பாராட்டினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தென் இத்தாலியில் சிசிலித் தீவிலுள்ள Piazza Armerina மறைமாவட்டத்திற்கு, இச்சனிக்கிழமை காலை 8.40 மணியளவில் மேய்ப்புப்பணி பயணம் மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Piazza Armerina  நகரின் ஐரோப்பா வளாகத்தில், ஆடல்பாடல்களுடன் மகிழ்வோடு காத்திருந்த பல்லாயிரக்கணக்கான விசுவாசிகளைச் சந்தித்து ஊக்கப்படுத்தினார்.

சமூக மற்றும் கலாச்சாரத்தில் வளர்ச்சியின்மை, தொழிலாளர் சுரண்டப்படுதல், இளையோர்க்குத் தரமான வேலையின்மை, குடும்பங்களாக வேறு இடங்களில் குடிபெயர்தல், கந்துவட்டி, குடிப்பழக்கம், சூதாட்டம், சிதைந்த குடும்ப உறவுகள், போதைப்பொருள்கள் போன்ற பல்வேறு பிரச்சனைகளால் Piazza Armerina மக்கள் துன்புறுவது பற்றி தன் உரையில் குறிப்பிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

சிசிலித் தீவின் இந்த மத்திய பகுதியில், புதியவழியில் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டுமென்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை, இப்பகுதியில், திருஅவை, மறைபோதக பிறரன்பின் திருஅவையாகப் பணியாற்றி வருவதை ஊக்கப்படுத்தினார்.

உடலிலும், மனத்திலும் தோல்விகண்டுள்ள மக்களை வரவேற்று, இரக்கமுள்ள ஒரு திருஅவையாக, இப்பகுதி திருஅவை பணியாற்றி வருகின்றது என்று உரையில் குறிப்பிட்ட திருத்தந்தை, கிறிஸ்தவ பிறரன்பு என்பது, தொண்டுபுரிவது அல்ல எனவும் எடுத்துரைத்தார்.

இளையோர் மற்றும் அவர்களின் பிரச்சனைகள் மீது கவனம் செலுத்தப்பட வேண்டுமென கேட்டுக்கொண்ட திருத்தந்தை, அந்த வளாகத்தில் கூடியிருந்த இளையோரிடம், இயேசு உங்களை அன்புகூர்கின்றார், அவர் உண்மையான மற்றும் விசுவாசமுள்ள நண்பர் என்றும், அவர் ஒருபோதும் கைவிடாதவர் என்றும் கூறினார்.

திருப்பலியில் அருள்பணியாளர்களின் மறையுரை எட்டு நிமிடங்களுக்குமேல் இருத்தலாகாது என்றும், ஆயர்களும், அருள்பணியாளர்களும் ஒன்றிணைந்து செயல்படுமாறும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 September 2018, 15:02