பலேர்மோவில் திருத்தந்தை திருப்பலி பலேர்மோவில் திருத்தந்தை திருப்பலி 

பலேர்மோவில் அருள்பணியாளர்களிடம் திருத்தந்தை

திருஅவை உலகிற்குமேல் அல்ல, உலகிற்குள் உள்ளது. இந்த உலகில் அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள் மற்றும், குருத்துவ கல்லூரி மாணவர்கள் புளிக்காரமாக வாழ வேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

செப்டம்பர் 15, இச்சனிக்கிழமை மாலை 3.15 மணியளவில், சிசிலியின், பலேர்மோ பேராலயத்தில், அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள், குருத்துவ கல்லூரி மாணவர்கள் ஆகியோரைச் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருளாளர் Pino Puglisi அவர்கள், உண்மையான அருள்பணியாளராக இருந்தார் என்றுரைத்து, அவரின் வாழ்வைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டார்.

ஓர் அருள்பணியாளரின் வாழ்வில் இருக்கின்ற மூன்று எளிமையான பணிகள் பற்றி விளக்க விரும்புவதாகத் தெரிவித்த திருத்தந்தை, ‘அனைவரும் இதை வாங்கி உண்ணுங்கள், ஏனெனில் இது உங்களுக்காகக் கையளிக்கப்படும் என் உடல்’ என, ஒவ்வொரு திருப்பலியிலும் அருள்பணியாளர்கள் சொல்லும் வார்த்தைகள், பலிபீடத்தோடு நின்றுவிடாமல், அன்றாட வாழ்விலும் வெளிப்பட வேண்டும் என்று உரைத்தார்.

இயேசு கிறிஸ்துவாக முதலில் வாழவேண்டியவர்கள் அருள்பணியாளர்கள் என்றும், ஓர் அருள்பணியாளர், தானமாக வழங்கப்படவேண்டிய மனிதர் என்றும், அருள்பணியாளரின் பணியானது, தொழில் அல்ல என்றும், மாறாக, அது ஒரு மறைப்பணி என்றும் திருத்தந்தை கூறினார்.

‘வாங்கி உண்ணுங்கள்’ என்ற சொற்கள் பற்றி ஒவ்வொரு நாளும் ஆன்ம ஆய்வு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்ட திருத்தந்தை, அருளடையாளங்களை நிறைவேற்றுதல் பற்றியும் பேசினார்.

தானமாக வழங்கப்பட வேண்டிய அருள்பணியாளர், மன்னிப்பின் மனிதராகவும் இருக்க வேண்டும் என்றும், அருள்பணியாளரின் வாழ்வோ, வழிபாடோ, எதுவாக இருந்தாலும், அது ஒரு சடங்காக அமைந்துவிடக் கூடாது என்றும் திருத்தந்தை கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 September 2018, 15:19