தேடுதல்

பலேர்மோவில் திருத்தந்தை திருப்பலி பலேர்மோவில் திருத்தந்தை திருப்பலி 

மாஃபியா மனிதரால் கடவுளில் நம்பிக்கை வைக்க முடியாது

தன் சகோதரனை வெறுத்துக்கொண்டு, கடவுளை அன்புகூர்கிறேன் என்று சொல்லும் எவரும் பொய்யர், ஏனெனில் கடவுள் அன்பானவர் என அவர் அறிவிக்கும் விசுவாசம் பொய்யானது - திருத்தந்தை

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

மாஃபியா குற்றக்கும்பலால் கொல்லப்பட்ட, அருளாளர் Pino Puglisi அவர்களின் நினைவாக, இச்சனிக்கிழமை காலை 11.15 மணிக்கு, சிசிலித் தீவின் பலேர்மோ நகரில், Foro Italico கடற்கரை பகுதியில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குற்றக்கும்பலில் இருக்கும் எவரும் கடவுளில் நம்பிக்கை வைக்க முடியாது என்று அழுத்தமாகச் சொன்னார்.

மாஃபியா எனப்படும் திட்டமிட்ட குற்றக்கும்பலில் உள்ளோர் பற்றி மறையுரையில் கூறியத் திருத்தந்தை, உங்களைப் பற்றியும், உங்கள் பணத்தைப் பற்றியும் நினைத்துக்கொண்டிருப்பதை நிறுத்தி, இயேசு கிறிஸ்துவின் உண்மையான கடவுள் பக்கம் மனந்திரும்புங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

வெறுப்பு என்பது, கிறிஸ்தவ வாழ்விலிருந்து அழிக்கப்பட வேண்டும் என்றும், தன் சகோதரரை வெறுத்துக்கொண்டு, ஒருவர் கடவுளில் விசுவாசம் வைக்க முடியாது என்றும் உரைத்த திருத்தந்தை, மாஃபியா குற்றக்கும்பல் போன்று இருப்பவர்கள், கிறிஸ்தவர்களாக வாழ இயலாது, ஏனெனில், அவர்கள், தங்கள் வாழ்வால், அன்பே உருவான கடவுளின் பெயரை அவமதிக்கின்றனர் என்று கூறினார்.

மதிப்பைத் தேடுபவர்கள் அல்ல, மாறாக, அன்புகூர்கின்றவர்களும், அடக்கி ஆள்பவர்கள் அல்ல, மாறாக, சேவையாற்றுகின்றவர்களும், அதிகாரத்தைத் தேடி ஓடுகின்றவர்கள் அல்ல, மாறாக, ஒன்றிணைந்து நடப்பவர்களும் இக்காலத்திற்குத் தேவை என்று, மறையுரையில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நான் யார் என்பது உனக்குத் தெரியாது என்பது மாஃபியாவின் தொடர் மந்திரமாக இருந்தால், எனக்கு நீ தேவை என்பது கிறிஸ்தவ தொடர் மந்திரமாக இருக்கும் என்றும், அதற்கு நீ விலைகொடுத்துத்தான் ஆகவேண்டும் என்பது மாஃபியாவின் தொடர் மந்திரமாக இருந்தால், ஆண்டவரே, அன்புகூர எனக்கு உதவும் என்பது, கிறிஸ்தவ தொடர் மந்திரமாக இருக்கும் என்றும் திருத்தந்தை கூறினார்.

சவப்போர்வையில் பைகள் கிடையாது, நீங்கள் உங்களோடு எதையும் எடுத்துச் செல்ல முடியாது என்று மாஃபியா குற்றுக்கும்பலில் உள்ளவர்களை நோக்கி கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குற்றுக்கும்பலில் உள்ள அன்புச் சகோதரர் சகோதரிகளே, உண்மையான கடவுளிடம் திரும்பி வாருங்கள், இவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால், உங்களின் சொந்த வாழ்வை இழப்பீர்கள், அது தோல்விகளிலெல்லாம் படுதோல்வியாக அமையும் என்றார்.    

அருளாளர் Pino Puglisi அவர்களின் சாட்சிய வாழ்வு பற்றியும் உரைத்த திருத்தந்தை, 25 ஆண்டுகளுக்குமுன், இதே நாளில் தனது பிறந்த நாளன்று இறந்த அருளாளர் Pino Puglisi அவர்கள், புன்னகையோடு வெற்றியை கிரீடமாக சூட்டிக்கொண்டார் என்று கூறினார்.  

Marco Antonio Colonna என்ற அரசர், 1582ம் ஆண்டில், பலேர்மோ கடற்கரையில் உலா வருவதற்கென Foro Italico என்ற அழகான நடைபாதையை அமைத்தார். 17 மற்றும் 18ம் நூற்றாண்டுகளில் பலேர்மோ நகரின் உயர்வகுப்பினரின் பொழுதுபோக்க இடமாக இது பயன்படுத்தப்பட்டது

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 September 2018, 15:18