தேடுதல்

கவுனாஸ் சாந்தகோஸ் பூங்காவில் திருத்தந்தை வழங்கிய மறையுரை கவுனாஸ் சாந்தகோஸ் பூங்காவில் திருத்தந்தை வழங்கிய மறையுரை 

லித்துவேனியா நாட்டில் திருத்தந்தையின் மறையுரை

கிறிஸ்துவ வாழ்வு, சிலுவையுடன் பிணைக்கப்பட்டுள்ள ஒரு வாழ்வு. லித்துவேனியா நாட்டில் வாழ்ந்த உங்கள் முன்னோர் பல்வேறு துயரங்களைத் தாங்கி வாழ்ந்தவர்கள்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அன்பு சகோதரர், சகோதரிகளே, இயேசு தன் பாடுகளை மும்முறை முன்னறிவித்தார் என்று நற்செய்தியாளர் மாற்கு குறிப்பிடுகிறார். அந்த மூன்று முறையும் சீடர்கள் அவரைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதால், மும்முறையும் அவர் அவர்களுக்கு பாடங்கள் சொல்லித் தந்தார். அவற்றில் இரண்டாம் முறை சொல்லித் தந்த பாடத்தை இன்றைய நற்செய்தியாக கேட்டோம்.

லித்துவேனிய கிறிஸ்துவர்களின் வாழ்வும், சிலுவையும்

கிறிஸ்துவ வாழ்வு, சிலுவையுடன் பிணைக்கப்பட்டுள்ள ஒரு வாழ்வு. லித்துவேனியா நாட்டில் வாழ்ந்த உங்கள் முன்னோர், பல்வேறு துயரங்களைத் தாங்கி வாழ்ந்தவர்கள். நீதிமான்களின் நன்மைத்தனத்தை முன்னிட்டு, அவர்கள் அடைந்த துன்பங்களை சாலமோனின் ஞானம் நூலிலிருந்து வாசிக்க கேட்டோம். இங்குள்ள பலரது குடும்பங்கள், உங்கள் முன்னோர் அடைந்த துயரங்களுக்கு சான்றுகளாய் விளங்குகின்றன. சைபீரியா என்ற சொல்லைக் கேட்டதும் உங்கள் உள்ளங்கள் நடுங்குகின்றன. அதேபோல், வில்நியூஸ், கவுனாஸ், ஆகிய பகுதிகளில் நீங்கள் அடைந்த துன்பங்களையும் நினைவில் கொண்டுள்ளீர்கள்.

சீடர்களுக்குப் பாடம் சொல்லித்தந்த இயேசு

இயேசு தன் துன்பம், தியாகம், பலி ஆகியவற்றைக் குறித்து பேசியதை சீடர்கள் கேட்க விரும்பவில்லை. அவர்கள் மனதில், தங்களில் யார் பெரியவர், சிறந்தவர் என்ற எண்ணமே ஆக்கிரமித்திருந்தது. தன் சீடர்கள், பலியையும், தியாகத்தையும் நிராகரித்து, அதிகாரத்தைக் கைப்பற்ற எண்ணியதற்கு, ஒரு மாற்று மருந்தை இயேசு அவர்களுக்கு வழங்கினார். அந்த முக்கியப் பாடத்தைச் சொல்லித்தர, அவர், அவர்கள் நடுவே, ஒரு குழந்தையைக் கொணர்ந்தார்.

லித்துவேனியா விடுதலை அடைந்ததன் நூறாவது ஆண்டைக் கொண்டாடும் இவ்வேளையில், மிகச் சிறியவர்களான யாரை இயேசு உங்கள் நடுவே வைக்கிறார்? ஒருவேளை, சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்களையா? வயதானவர்களையா? தனிமையில் வாடுபவரையா? இவர்களை "நம் நடுவே" இயேசு வைப்பதால், அவர்களை நாம் கவனிக்கவில்லை என்று சாக்கு சொல்ல முடியாது.

இயேசுவை நம் நடுவே வரவேற்போம். அவரது வார்த்தைகள் வழியே, திருப்பலி வழியே, நம்மைச் சுற்றியுள்ள சிறியவர்கள் வழியே நாம் இயேசுவை வரவேற்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 September 2018, 15:03