தேடுதல்

லித்துவேனிய இளையோருடன் திருத்தந்தையின் சந்திப்பு லித்துவேனிய இளையோருடன் திருத்தந்தையின் சந்திப்பு 

லித்துவேனிய இளையோருடன் திருத்தந்தை பிரான்சிஸ்

இவ்வுலகம் கற்பிக்கும் தன்னலம், தனித்து வாழ்தல் ஆகிய சுயநலப் போக்குகளில் சிக்கிக்கொள்ளாமல், எதிர் நீச்சலடிக்க இளையோர் துணியவேண்டும் – திருத்தந்தையின் அழைப்பு

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அன்பு நண்பர்களே, மாலை வணக்கம். மோனிக்கா, ஜோனாஸ், நீங்கள் இருவரும் வழங்கிய சாட்சியத்திற்கு நன்றி. உங்களோடு ஒரு நாடக அரங்கத்திற்குச் சென்று, பின்னர், ஓர் உணவகத்தில் அமர்ந்து பேசியதைப் போல் உணர்ந்தேன்.

உங்கள் வாழ்க்கை நாடகம் அல்ல, அதில் நடப்பவை அனைத்தும் நிஜமானவை. உங்கள் இருவரைப்போலவே இங்கு கூடியிருக்கும் அனைவருக்கும் உண்மையான அனுபவங்கள் பல உள்ளன.

தீக்கிரையாகி, இடிந்து விழுந்து மீண்டும் கட்டப்பட்ட பேராலயம்

இந்தப் பேராலயம் பலமுறை தீயினால் கருகி, பலமுறை இடிந்து விழுந்துள்ளது. அதேபோல், உங்கள் வாழ்வும் தீயினால் கருகி, இடிந்து விழுந்துள்ளது. ஆனால், இந்தப் பேராலயம் விழுந்தபோதெல்லாம், மனம் தளராமல், விரக்தி அடையாமல், ஆலயத்தை மீண்டும், மீண்டும் கட்டியெழுப்ப மக்கள் திரண்டு வந்தனர். கொடிய துன்பங்கள், இடர்பாடுகள் ஆகியவற்றைக் கண்டு மனம் தளராமல் உழைத்தவர்களாலேயே இந்நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தது.

இடிந்துபோகாமல் வாழும் இளையோர்

மோனிக்கா, உன் தந்தையின் வாழ்வு, அவரது மரணம் ஆகியவையும், ஜோனாஸ், உனக்கு ஏற்பட்டுள்ள உடல் நலக்குறைவும் உங்கள் இருவரையும் இடிந்துபோகச் செய்திருக்கலாம். இருப்பினும், இங்கு வந்து சாட்சியம் வழங்கும் அளவு, நீங்கள் இருவரும், மன உறுதி பெற்றுள்ளீர்கள். இறைவன் வழங்கிய அருளே, வாழ்வில் முன்னேறிச் செல்ல உங்களை உந்தித் தள்ளியது.

இறைவனின் அருள் உங்களை எவ்விதம் வந்தடைந்தது? நம்பிக்கை கொண்ட நல்ல மனிதர்கள் உங்கள் வாழ்வில் நுழைந்து, தங்கள் நம்பிக்கை அனுபவங்களால் உங்களை வளர்த்ததால், இறைவனின் அருள் உங்களை அடைந்தது.

இறைவன் காட்டும் உறவா, உலகம் காட்டும் தனிமையா

நம்பிக்கை கொண்ட ஒரு குழுமத்தில் உருவாகும் உறவுப்பிணைப்பின் வழியே இறைவன் நம் வாழ்வில் நுழைய விரும்புகிறார். எனவே, இவ்வுலகம் கற்பிக்கும் வழிகளான, தன்னலம், தனித்து வாழ்தல் ஆகியவற்றை நம்பவேண்டாம். தனித்து வாழ்வதால், நாம் நம்மை மையப்படுத்திய சுயநல உலகில் சிக்கிக்கொள்கிறோம். அத்தகைய உலகப் போக்கிற்கு எதிராக நீச்சலடிக்க நீங்கள் துணியவேண்டும். பிறரோடு இணைந்து, இயைந்து வாழ்வது மிக அழகானது, அதேவேளையில் மிகுந்த சவாலானது.

செபமும், பாடலும் சக்திவாய்ந்த கருவிகள்

இங்கு சாட்சியம் சொன்ன இருவரும், பாடகர் குழுவில் இருப்பதையும், குடும்பத்தில் செபிப்பதையும் பற்றி கூறினீர்கள். செபமும், பாடலும் நம்மிடம் உள்ள சக்திவாய்ந்த கருவிகள். பாடல்களும் இசையும் நம் உள்ளங்களை மென்மையாக்கி, இறைவனின் குரலைக் கேட்கும் மனநிலையைத் தருகிறது. செபம் நமக்குள் நம்பிக்கையை வளர்த்து, தீய சக்திகளை எதிர்கொள்ளும் வலிமையைத் தருகிறது.

பிறருக்கு உதவிகள் செய்வதன் வழியே...

நீங்கள் இருவரும் மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதன் வழியே, வாழ்வில் ஆதரவைக் கண்டுள்ளீர்கள். மோனிக்கா, மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு உதவி செய்வதன் வழியே, மனித துன்பம் குறித்த உன் கண்ணோட்டம் தெளிவாகியுள்ளது என்று கூறினாய்.

நம் சுயநலத்தைவிட்டு வெளியேறி, பிறருக்கு உதவிகள் செய்வதற்கு, இயேசு நம்மை அழைக்கிறார். அவர் அழைப்பை ஏற்பதற்கு தயங்கவேண்டாம். மென்மைத்தனத்தின் புரட்சியில் இணைவதற்கு, கிறிஸ்து விடுக்கும் அழைப்பை ஏற்க அஞ்சவேண்டாம்.

வாழ்வு, ஒரு நாடகமாக, வீடியோ விளையாட்டாக இருந்தால், திரை விழுந்ததும், நாடகமோ, விளையாட்டோ முடிந்துவிடும். ஆனால், வாழ்வு, இறைவனின் உள்ளத்துடிப்புக்கு ஈடுகொடுத்துச் செல்வது. சிலவேளைகளில் அது வெகு விரைவில் முடிந்துவிடும், வேறு சில வேளைகளில், அது மிகவும் மெதுவாகச் செல்லும்.

இலக்கு ஏதுமின்றி, சுற்றிவரும் வாழ்வு

வாழ்வு எப்போதும் முன்னேறிச் செல்வதில், நேரிய வழிகளைத் துணிவுடன் தெரிவு செய்வதில் அடங்கியுள்ளது. இலக்கு ஏதுமின்றி, சுற்றி, சுற்றிச் செல்லும் பாதையல்ல, வாழ்வு. இலக்கு ஏதுமின்றி, நம்பிக்கையின்றி சுற்றி வருவதற்கு இளையோருக்கு பெரும் சோதனைகள் உள்ளன.

உங்கள் நம்பிக்கையை இயேசுவின் மீது வைத்து, முன்னேறிச் செல்லுங்கள். உங்கள் வாழ்வு, அவ்வப்போது தீப்பிடித்து எரிந்தாலும், அதை மீண்டும் கட்டியெழுப்பும் வேளையில், இயேசுவும் உங்களோடு இணைந்து உங்கள் வாழ்வை கட்டியெழுப்புவார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 September 2018, 15:02