லித்வேனியாவின் இறை இரக்க திருத்தலம் லித்வேனியாவின் இறை இரக்க திருத்தலம் 

வில்னியூஸ் இரக்கத்தின் அன்னை திருத்தலம்

1702ம் ஆண்டில், பெரிய வடக்குப் போரின்போது, சுவீடன் இராணுவம், வில்னியூஸ் நகரைக் கைப்பற்றியவேளையில், இரக்கத்தின் அன்னை மரியா மக்களைக் காப்பாற்றினார்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

செப்டம்பர் 22, இச்சனிக்கிழமை மாலை 4.20 மணிக்கு, வில்னியூஸ் திருப்பீட தூதரகத்திலிருந்து, இரக்கத்தின் அன்னை திருத்தலத்திற்குக் காரில் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். அத்திருத்தல வளாகத்தில், அந்நகர் ஆர்த்தடாக்ஸ் சபைத் தலைவரும், புனித தெரேசா பங்குத் தந்தையும் திருத்தந்தையை வரவேற்றனர். இரக்கத்தின் அன்னை சிற்றாலயம் செல்லும் வழியில், நூற்றுக்கணக்கான அநாதைச் சிறாரும், அவர்களைப் பாதுகாக்கும் குடும்பத்தினரும் நின்று கொண்டிருந்தனர். நோயாளரும் இருந்தனர். அவர்களை ஆசிர்வதித்தார் திருத்தந்தை. இத்திருத்தலத்தில், செபமாலையின் மகிழ்வு மறையுண்மைகளின் மூன்றாவது மறையுண்மையை அனைவரும் செபித்தனர். அன்னை மரிக்கு  தங்க செபமாலை ஒன்றையும் காணிக்கையாக அளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ். இரக்கத்தின் அன்னை திருத்தலத்தில் திருத்தந்தை சிறிய மறையுரை ஒன்றும் நிகழ்த்தினார். இவ்வழிபாட்டை நிறைவு செய்து, அந்த வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கும் ஆசிர் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். விடியலின் வாயில் மரியன்னை என தொடக்கமுதல் அழைக்கப்பட்டுவந்த இந்த அன்னை மரியா, 1927ம் ஆண்டு ஜூலை 5ம் தேதியன்று, இரக்கத்தின் அன்னை மரியாவாக முடிசூட்டப்பட்டார். நகர வாயில் தாக்கப்படாமல் இருப்பதற்காகவும், அதைக் கடந்து செல்லும் பயணிகளின் பாதுகாப்புக்காகவும், அந்நகரின் வாயில் கதவுக்கு மேலே இந்த ஓவியம் முதலில் இருந்தது. ஏறத்தாழ 1630ம் ஆண்டில் வரைந்து முடிக்கப்பட்ட அன்னை மரியா படம், புதுமைகள் மாதாவாக மக்களுக்கு அருள்வழங்கி வருகிறார். 1702ம் ஆண்டில், பெரிய வடக்குப் போரின்போது, சுவீடன் இராணுவம், இந்நகரைக் கைப்பற்றியவேளையில், இந்த அன்னை மரியா மக்களைக் காப்பாற்றினார் என, பாரம்பரியமாகச் சொல்லப்பட்டு வருகிறது. விடியலின் வாயில் மரியன்னை ஓவியம், பின்னர் வில்நியூசில் ஒரு சிற்றாலயத்தில் வணங்கப்பட்டு வந்தது.

இரக்கத்தின் அன்னை மரியா திருத்தலத்தில், வழிபாட்டை நிறைவுசெய்து. அங்கிருந்து, 2.7 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள வில்நியூஸ் பேராலயத்திற்குத் திறந்த காரில் சென்றார் திருத்தந்தை. அந்த வளாகத்தில் இளையோரைச் சந்திப்பதுடன் முதல்நாள் பயண நிகழ்வுகள் முற்றுப்பெறுகின்றன. “கிறிஸ்து இயேசுவே நம் நம்பிக்கை” என்ற தலைப்பில், லித்துவேனியாவில் திருத்தந்தை மேற்கொண்டுள்ள திருத்தூதுப் பயணம், அம்மக்களின் விசுவாசத்தை மேலும் உறுதிப்படுத்துவதாக

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 September 2018, 15:01