லித்துவேனிய அரசுத்தலைவரின் வரவேற்புரை லித்துவேனிய அரசுத்தலைவரின் வரவேற்புரை 

லித்துவேனிய அரசுத்தலைவரின் வரவேற்புரை

லித்துவேனிய யூதர்கள் படுகொலை செய்யப்பட்ட நினைவு நாள். நாங்கள் கற்றுக்கொண்ட இரக்கத்தின் பாடங்களை நினைவில் வைத்திருப்போம்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தையே, நம்பிக்கை மற்றும் தியாகம் வழியாக, வாழ்வைக் காத்துவந்துள்ள லித்துவேனிய மக்கள் அனைவர் சார்பாக தங்களை வரவேற்கிறேன். உலக வரைபடத்தில் சிறிய நாடுகளைப் பார்ப்பதற்காகச் செல்லும் திருத்தந்தையே, இந்நாள்களில் எம்மோடு இருப்பதற்கு நன்றி.  லித்துவேனிய நாடு சுதந்திரம்பெற்றதன் நூறாம் ஆண்டில், தங்களின் இப்பயணம் விலைமதிப்பற்ற கொடையாக உள்ளது. இந்நாட்டின் விடுதலையை திருப்பீடம் எப்போதும் ஆதரித்து வந்துள்ளது. லித்துவேனிய சுதந்திர அறிக்கைக்கு ஓராண்டுக்கு முன்னதாகவே, திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள், லித்துவேனிய நாளை அறிவித்தார். லித்துவேனியாவின் சுதந்திரத்தை திருப்பீடம் முதலில் அங்கீகரித்து, ஏனைய நாடுகளும் அங்கீகரிப்பதற்கு உற்சாகப்படுத்தின. நாடு கடத்தப்பட்ட நிலை, சிறைவாழ்வு, குண்டு தாக்குதல் போன்றவற்றுக்கு மத்தியில், உறுதியான விசுவாசத்தைக் காத்துவந்த நாடு இது. பக்தியுள்ள மற்றும் அச்சமற்ற லித்துவேனியர்கள், முன்னாள் சோவியத் கம்யுனிச அடக்குமுறைக்கு அஞ்சாது, 17 ஆண்டுகள், மறைந்த வாழ்ந்து. கத்தோலிக்கத் திருஅவையின் வரலாற்றை வெளியிட்டனர். நாடுகள் மற்றும் மதங்களுக்கு இடையே பாலங்களைக் கட்டியெழுப்பும் பணியை மேற்கொண்டுள்ள திருத்தந்தையே, ஏராளமான துன்புறும் மக்களைப் பார்த்துள்ளீர் மற்றும் அவர்களுக்கு உதவியுள்ளீர். கடந்தகால வேதனை நிறைந்த அனுபவங்களை மட்டுமல்லாமல், மிகுந்த நம்பிக்கையுடன், வருங்காலத்தை நோக்கியும் லித்துவேனியா செல்கிறது. இளையோர் நலன் குறித்து, நாடு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. செப்டம்பர் 23, இஞ்ஞாயிறு, லித்துவேனிய யூதர்கள் படுகொலை செய்யப்பட்ட நினைவு நாள். நாங்கள் கற்றுக்கொண்ட இரக்கத்தின் பாடங்களை நினைவில் வைத்திருப்போம். திருத்தந்தையே, உம் வார்த்தைகள், எப்போதும் நம்பிக்கையைக் கொணர்ந்து கனிகளை வழங்குகின்றன.

இவ்வாறு வரவேற்புரை வழங்கினார், லித்துவேனிய அரசுத்தலைவர் Dalia.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 September 2018, 14:57