தேடுதல்

வில்நியூஸ் அரசுத்தலைவர் மாளிகையில் திருத்தந்தை பிரான்சிஸ் வில்நியூஸ் அரசுத்தலைவர் மாளிகையில் திருத்தந்தை பிரான்சிஸ் 

வில்நியூஸ் அரசுத்தலைவர் மாளிகையில் வரவேற்பு

லித்துவேனிய மக்களுக்காக, நான் தொடர்ந்து செபிக்கின்றேன் என உறுதிகூர்கிறேன்.

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

வில்நியூஸ் நகர் பன்னாட்டு விமானநிலையத்திலிருந்து 7.5 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள, அரசுத்தலைவர் மாளிகைக்கு, கறுப்பு நிற காரில் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். அரசுத்தலைவர் மாளிகையில், அரசுத்தலைவர் Dalia அவர்கள் திருத்தந்தையை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், அரசுத்தலைவர் Dalia அவர்களும் தனியே சிறிது நேரம் உரையாடிய பின்னர், "உங்களின் தாராள வரவேற்பு மற்றும் உபசரிப்புக்கு நன்றி. எல்லாம்வல்ல கடவுளின் அபரிவிதமான ஆசிர்வாதங்கள் உங்கள்மீது பொழியப்பட செபிக்கின்றேன், இப்படிக்கு பிரான்சிஸ்" என தங்கப் புத்தகத்தில் எழுதி கையெழுத்திட்டார் திருத்தந்தை. இயேசு போதகர் என்பதை விளக்கும், மொசைக் வண்ண வேலைப்பாடுகள் நிறைந்த பெரிய அழகிய படம் ஒன்றை அரசுத்தலைவருக்கு அளித்து, அதன் சிறப்பையும் விளக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். அரசுத்தலைவர் Dalia அவர்களும், வெள்ளியாலான ஆலய மணி ஒன்றைத் திருத்தந்தைக்கு அளித்து, அது பற்றி அவர் விளக்கினார். அச்சமயத்தில், அந்த மாளிகையின் முன்புறத்திலுள்ள Simonas Daukantas வளாகத்தில், அரசு அதிகாரிகள், பல்வேறு சமூக அமைப்பைச் சார்ந்த பிரதிநிதிகள், தொழில் நிறுவன பிரதிநிதிகள், இளையோர் அமைப்பின் பிரதிநிதிகள், மாற்றுத்திறனாளர்கள், சாரணர் படையினர், தூதரக அதிகாரிகள், திருஅவை அதிகாரிகள் என, ஏராளமானோர் திருத்தந்தைக்காகக் காத்திருந்தனர். அவர்களைச் சந்திக்கச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். முதலில் லித்துவேனிய அரசுத்தலைவர் Dalia அவர்கள் வரவேற்புரையாற்றினார். அதன் பின்னர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், லித்துவேனிய நாட்டுக்கான தனது முதல் உரையை வழங்கினார். இவ்வுரையை நிறைவுசெய்து, அந்த மாளிகைக்கு 1.6 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள திருப்பீட தூதரகம் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். 1930களில் கட்டப்பட்ட இத்தூதரகத்தில், மதிய உணவருந்தி, ஓய்வும் எடுத்துக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 September 2018, 14:51