தேடுதல்

Vatican News
வில்நியூஸ் பன்னாட்டு விமானநிலையத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் வில்நியூஸ் பன்னாட்டு விமானநிலையத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்   (ANSA)

திருத்தந்தையின் பால்டிக் திருத்தூதுப் பயணம்

லித்துவேனியா, லாத்வியா, எஸ்டோனியா ஆகிய மூன்று பால்டிக் நாடுகளும் ஒரே மாதிரியாகத் தெரிந்தாலும், அவை பன்மைத்தன்மை கொண்டவை.

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்திலிருந்து, செப்டம்பர் 22, இச்சனிக்கிழமை காலை ஏழு மணிக்கு, தனது 25வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தைத் தொடங்கினார். லித்துவேனியா, லாத்வியா, எஸ்டோனியா ஆகிய மூன்று பால்டிக் நாடுகளுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மேற்கொண்டுள்ள இத்திருத்தூதுப் பயணத்தில், முதலில், இச்சனிக்கிழமையன்று லித்துவேனியா சென்றார். உரோம் பியூமிச்சினோ பன்னாட்டு விமானநிலையத்திலிருந்து, A320 ஆல்இத்தாலிய விமானத்தில், சரியாக காலை 7.37 மணிக்கு, லித்துவேனியத் தலைநகர் வில்நியூசுக்குப் புறப்பட்டார் திருத்தந்தை. மூன்று மணி நேரம் தன்னோடு பயணம் செய்து, இத்திருத்தூதுப் பயண நிகழ்வுகள் பற்றி செய்திகள் வெளியிடவிருக்கும் பன்னாட்டு செய்தியாளர்களையும் வாழ்த்தினார் திருத்தந்தை பிரான்சிஸ். “நான் செல்லும் இந்த மூன்று நாடுகளும் ஒரே மாதிரியாகத் தெரிந்தாலும், அவை பன்மைத்தன்மை கொண்டவை. இந்நாடுகள், பொதுவான, அதேநேரம் வித்தியாசமான வரலாற்றையும் இவை கொண்டுள்ளன. இந்நாடுகளில் நீங்கள் ஆற்றவிருக்கும் நற்பணிக்கு வாழ்த்துக்கள்” என்றார் திருத்தந்தை. இந்தப் பயணத்தில் தான் கடந்து சென்ற, இத்தாலி, குரோவேஷியா, ஹங்கேரி, சுலோவாக்கியா, போலந்து ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு செபங்களும், வாழ்த்தும் கலந்த தந்திச் செய்திகளையும் திருத்தந்தை அனுப்பினார். விமானத்தில் காலை உணவும் உண்டார், திருத்தந்தை.

விமானநிலைய வரவேற்பு

திருத்தந்தை பயணம் செய்த A320 ஆல்இத்தாலிய விமானம், உள்ளூர் நேரம் முற்பகல் 11.30 மணிக்கு, இந்திய இலங்கை நேரம், இச்சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு, வத்திக்கான் மற்றும் லித்துவேனிய நாடுகளின் கொடிகளைத் தாங்கியவண்ணம், வில்நியூசில் தரையிறங்கியது. லித்துவேனிய திருப்பீட தூதர், விமானத்திற்குள் சென்று திருத்தந்தையை வரவேற்றார். விமானப்படிகளின்கீழ், லித்துவேனிய அரசுத்தலைவர் Dalia Grybauskaité அவர்கள் முன்னின்று திருத்தந்தையை வரவேற்றார். இரு சிறார் மலர்க்கொத்துக்களைக் கொடுத்தனர். 21 துப்பாக்கிகள் முழங்க, சிவப்பு கம்பள அரசு மரியாதை அளிக்கப்பட்டது. அதன்பின்னர் முக்கிய அதிகாரிகளை திருத்தந்தைக்கு அறிமுகம் செய்து வைத்தார், அரசுத்தலைவர் Dalia. விமானநிலையத்தில் சிறார் உட்பட பொதுமக்களும், இருநாடுகளின் கொடிகளை ஏந்திக்கொண்டு திருத்தந்தையை வரவேற்றனர். நகரின் எல்லா இடங்களிலும் மஞ்சள், பச்சை, சிவப்பு நிற லித்துவேனியக் கொடிகளும், மஞ்சளும் வெண்மையும் கொண்ட வத்திக்கான் கொடிகளும் பறந்து கொண்டிருந்தன

22 September 2018, 14:30