லித்துவேனிய நினைவு அருங்காட்சியகம் லித்துவேனிய நினைவு அருங்காட்சியகம்  

லித்துவேனியாவில் திருத்தூதுப் பயண நிறைவு நிகழ்வு

79 விழுக்காட்டு கத்தோலிக்கர் வாழ்கின்ற லித்துவேனியாவில் மக்கள் திருத்தந்தையரை எப்போதும் அன்புகூர்ந்து ஆதரவாக இருக்கின்றார்கள் என்பதை இந்நாள்களிலும் காண முடிந்தது

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

லித்துவேனியா நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான, கவுனாசிலிருந்து 104 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள வில்நியூஸ் நகருக்கு, இஞ்ஞாயிறு மாலை காரில் பயணம் செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், யூதக் குடியிருப்பு நினைவிடத்தில் இறங்கினார். சிறிதுநேரம் அமைதியாக நின்று செபித்த திருத்தந்தை, மலர்வளையம் ஒன்றை வைத்தார். பின்னர், வில்நியூஸ் பேராயர் Gintaras Grušas அவர்களுடன், அருங்காட்சியகம் சென்ற திருத்தந்தை, இந்த நினைவிடத்திற்கென தான் கொண்டு வந்திருந்த, பொன்னிற விளக்கைப் பொருத்தினார். அதன்பின்னர், அங்கிருக்கும், சிறைகள், சித்ரவதைக்கூடங்கள் போன்றவற்றையும் பார்வையிட்ட திருத்தந்தை, ஒவ்வோர் இடத்திலும் அமைதியாக நின்று செபித்தார். அங்கிருந்து, ஆக்ரமிப்புகளில் பலியானவர்கள் மற்றும் விடுதலைப் போராட்ட தியாகிகள் நினைவிடத்திற்கு திருத்தந்தை வந்தபோது, அதற்கு வெளியே பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். அவ்விடத்தில் “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்? (மத்.27:46)” என்ற இயேசுவின் சொற்களைச் சொல்லி செபித்தார்.  இவ்வாறு செபித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவ்விடத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்திலுள்ள வில்நியூனிஸ் திருப்பீட தூதரகத்திற்குத் திறந்த காரில் சென்றார். சாலை நெடுகிலும் நின்று வாழ்த்திய மக்களை, வாழ்த்திக்கொண்டே சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பீட தூதரகத்தில் அந்நாட்டில் மறைப்பணியாற்றும் இயேசு சபையினரையும் சந்தித்து கலந்துரையாடினார். இத்துடன் இஞ்ஞாயிறு பயண நிகழ்வுகளும், லித்துவேனியத் திருத்தூதுப் பயண நிகழ்வுகளும் நிறைவடைந்தன. இத்திங்கள் காலை லாத்வியா நாட்டிற்குப் புறப்பட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 September 2018, 16:39